தேடுதல்

தென்கொரியாவின் திருப்பீடத்திற்கான தூதர் Oh Hyun-Joo, தென்கொரியாவின் திருப்பீடத்திற்கான தூதர் Oh Hyun-Joo, 

தென் கொரியாவிலிருந்து திருப்பீடத்திற்கான தூதராக முதன்முறையாக பெண் ஒருவர் நியமனம்

உலகம் முழுவதிலுமிருந்து பெண் திருப்பீடத்தூதர்களாக ஏறக்குறைய 20 பேரை வத்திக்கான் பெற்றுள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தென்கொரியா முதன்முறையாக கத்தோலிக்கப் பெண்ணான Oh Hyun-Joo-வை திருப்பீடத்திற்கானத் தூதராக அறிவித்துள்ளது என்றும், இருதரப்பு பிரச்சனைகளையும் கையாண்டு நிர்வாகம் செய்யும் திறன் படைத்தவர் என்றும், தென்கொரியா செய்திகள்  தெரிவிக்கின்றன.

சனவரி 4, இவ்வியாழனன்று, CPBC எனப்படும் கத்தோலிக்க அமைதி ஒலிபரப்புக் கழகம் Oh Hyun- Joo-வைத் தென்கொரியா நாட்டின் திருப்பீடத்திற்கான தூதராகவும் நியமித்துள்ளதை அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் துணைத்தூதராக, நிரந்தர உறுப்பினராக பணியாற்றிய Joo-வின் தூதரகப் பணிகள், அனைத்துலக வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, மேலாண்மை ஆகியவை அவரதுப் புதிய பணிக்கு உதவியாக இருக்கும் என்று தென்கொரிய அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.  

2023-ஆம் ஆண்டு திருப்பீடம் மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையேயான உறவின் 60-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட இருக்கும் நிலையில், சிறப்பாக நிர்வகிக்கும் திறன் படைத்தவர் Joo என்றும் தெரிவித்துள்ளது தென்கொரிய அமைச்சகம்.

திருப்பீடத்திற்கான 17-வது தென் கொரிய தூதரான Joo, 1969-ஆம் ஆண்டு பிறந்தவர் எனவும், 1994-ஆம் ஆண்டில் கொரிய வெளிநாட்டுப் பணிகளில் சேர்ந்து பணி புரிந்தவர் என்றும், மேலும், அவர் ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது செயலாளராகப் பணியாற்றியபோது, அமெரிக்காவில் உள்ள நெவார்க் உயர்மறைமாவட்டத்தின் புனித வளனார் கொரியன் பங்குதளத்தில் 2003-இல் கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்றவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ. நா.வின் மனித உரிமைகள் அவைத் தலைவரின் சிறப்பு உதவியாளராகவும், மேம்பாட்டு ஒத்துழைப்பு இயக்குநராகவும் Joo பணியாற்றியுள்ளார்.

தென் கொரியாவிலிருந்து வத்திக்கானுக்கான முதல் தூதராக ஷின் ஹியூன்-ஜூன் 1974-இல் நியமிக்கப்பட்டார். உலகம் முழுவதிலுமிருந்து திருப்பீடத்திற்கான தூதர்களாக ஏறக்குறைய 20 பெண்களை வத்திக்கான் பெற்றுள்ளது. இருப்பினும், வத்திக்கானுக்குப் பெண் தூதரை அனுப்பிய முதல் கண்டம் ஆப்பிரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2023, 14:09