தேடுதல்

40வது திருத்தூதுப்பயணம் நல்லிணக்கத்தின் பயணமாக அமையும்

திருத்தந்தையின் 40ஆவது திருத்தூதுப்பயணம் தலத்திரு அவைகளுக்கு ஆறுதலையும், மக்களுக்கு ஊக்கத்தையும் தருவதாக அமையும் - கர்தினால் பரோலின்

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கின்ற காங்கோ மற்றும் தென்சூடானுக்கான  40ஆவது திருத்தூதுப்பயணமானது நல்லிணக்கத்தின் பயணமாகவும் அமைதியின் பயணமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் கர்தினால் பியத்ரோ பரோலின்

சனவரி மாதம் 31 செவ்வாய் முதல் பிப்ரவரி மாதம் 5 ஞாயிறு வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ள இருக்கும் காங்கோ மற்றும் தென்சூடான் திருத்தூதுப்பயணம் பற்றிய தகவல்களை சனவரி 28 சனிக்கிழமையன்று காணொளிக் காட்சியாக வெளியிட்டபோது இவ்வாறுக் குறிப்பிட்டுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

ஜூலை மாதம் காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் தென் சூடான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்தில் தானும் உடன் செல்வதாகவும், திருத்தந்தை விரும்புவது போல இப்பயணம் நல்லிணக்கத்தின் பயணமாக அமையும் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் இத்திருத்தூதுப்பயணம் தலத்திரு அவைகளுக்கு ஆறுதலையும், மக்களுக்கு ஊக்கத்தையும்  தருவதாக அமையும் என்று எடுத்துரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், அதிக மக்கள் தொகையைக் கொண்ட பெரிய ஆப்ரிக்கக் கண்டத்தில் வாழும் மக்களின் நிலையைக் காணச் செல்லும் திருத்தந்தையின் பயணம் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் ஓர் அமைதிப் பயணமாகவும் அமையும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், இத்திருத்தூதுப்பயணம் நல்ல முறையில் நடைபெற தான் தொடர்ந்து செபிப்பதாக குறிப்பிட்டுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், உலக மக்கள் அனைவரும் திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்திற்காக சிறப்பான முறையில் செபிக்க வேண்டுமென்றும் அக்காணொளிக் காட்சியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2023, 12:14