தேடுதல்

கர்தினால் மாரியோ கிரெக் கர்தினால் மாரியோ கிரெக்  

திருஅவையின் வருங்காலத்திற்கு தலைமுறைகளுக்கு இடையே உரையாடல்

இளையோர், வருங்காலத்தின் கதவுகளைத் திறக்கும் வல்லமை படைத்தவர்கள், ஆயினும், வருங்காலத்திற்குரிய திறவுகோலை வயதுவந்தோர் வைத்திருக்கின்றனர் - கர்தினால் கிரெக்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருஅவையின் வருங்காலத்திற்கு தலைமுறைகளுக்கு இடையே உரையாடல் அவசியம் என்று, உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பொதுச் செயலர் கர்தினால் மாரியோ கிரெக் அவர்கள் கூறியுள்ளார்.

நவம்பர் 01, இச்செவ்வாயன்று, சந்திப்புக் கலாச்சாரம் என்ற தலைப்பில், திருஅவையின் ஒருங்கிணைந்த பயணம் பற்றி, ஆப்ரிக்க கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும், பேராசிரியர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு இணையதளம் வழியாக உரையாடிய நிகழ்வையொட்டி அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், தலைமுறைகளுக்கு இடையே உரையாடல் இடம்பெறவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார், கர்தினால் கிரெக்.  

“ஆப்ரிக்கா முழுவதும் உறவுப் பாலங்களைக் கட்டுதல்: திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே ஓர் ஒன்றிணைந்த சந்திப்பு” என்ற தலைப்பில் இந்த இணையதள சந்திப்பு உரையாடல் நடைபெற்றது.

திருஅவையின் வருங்காலம்

திருஅவை தன் வாழ்விலிருந்து இளைய தலைமுறைகளை ஒதுக்கினால், அது பெருமளவான குருதியைச் சிந்தும் மரணத்திற்குத் தீர்ப்பிடப்படும் என்று, இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு அனுப்பிய செய்தியில் எச்சரிக்கை விடுத்துள்ளார், கர்தினால் கிரெக்.    

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பலமுறை வலியுறுத்தி இருப்பதுபோல், வயதுமுதிர்ந்தோருக்கும், இளையோருக்கும் இடையே திறந்தமனம்கொண்ட உரையாடலே, திருஅவையின் வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு அடிப்படையானது எனவும் கர்தினால் கிரெக் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இளையோர், வருங்காலத்தின் கதவுகளைத் திறக்கும் வல்லமை படைத்தவர்கள், ஆயினும், வருங்காலத்திற்குரிய திறவுகோலை வயதுவந்தோர் வைத்திருக்கின்றனர் என்றுரைத்துள்ள கர்தினால் கிரெக் அவர்கள், இதனாலேயே தலைமுறைகளுக்கு இடையே உரையாடல் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, சிகாகோ இலெயோலா பல்கலைக்கழகம்  வட மற்றும், இலத்தீன் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே சந்திப்பு ஒன்றை முதன்முறையாக ஏற்பாடு செய்து நடத்தியது. அச்சமயத்திலும் திருத்தந்தை அம்மாணவர்களோடு இணையதளம் வழியாக உரையாடினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2022, 15:08