தேடுதல்

காலநிலை குறித்த ஐ.நா., பாரிஸ் ஒப்பந்தங்களுக்கு இசைவு

ஏழாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட தற்போதைய உலகளாவிய காலநிலை மோசமாக உள்ளது. இப்பூமிக்கோளம் ஏற்கனவே 1.2 செல்சியுஸ் டிகிரியை எட்டியுள்ளது - கர்தினால் செர்னி

மேரி தெரேசா: வத்திக்கான்

காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 1992ஆம் ஆண்டு ஒப்பந்தம் (UNFCCC), 2015ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தம் ஆகிய இரண்டையும் செயல்படுத்தும்முறை குறித்த வத்திக்கானின் வரைவுத்தொகுப்பு, ஐ.நா. தலைமைச் செயலகத்தில்  சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்வு, அக்டோபர் 04, இச்செவ்வாயன்று வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அர்ப்பணத்திற்குத் தூண்டுதலாக இருந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருநாளாகிய இந்நாளில், இவ்விரு உலகளாவிய ஒப்பந்தங்களில், வத்திக்கான் நாட்டின் சார்பாக திருப்பீடம் இணைகின்றது என்பதை மகிழ்வோடு அறிவிப்பதாக கூறியுள்ளார்.

பன்னாட்டு ஒத்துழைப்பு அவசியம்

உலகின் பல்வேறு நாடுகளைப் பாதித்துள்ள போர் இடம்பெறும் இக்காலக்கட்டத்தில், காலநிலை மாற்றம் போன்ற அச்சுறுத்தும் விவகாரங்களுக்கு எதிராகச் செயலாற்ற, ஒருங்கிணைந்த சூழலியலுக்கு ஆதரவான முயற்சிகள் ஒன்றிணைக்கப்படவேண்டும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

வத்திக்கானின் நான்காம் பியோ மாளிகையில் "நம் பொதுவான இல்லத்தைப் பராமரித்தல்"  என்ற தலைப்பில், அறிவியல் மற்றும், சமூக அறிவியல் பாப்பிறை அமைப்புகளின் ஒத்துழைப்போடு திருப்பீடச் செயலகம் நடத்திய இக்கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், இவ்விரு ஒப்பந்தங்களில் திருப்பீடம் இணைந்திருப்பதோடு, இவற்றை 198 நாடுகள் ஏற்றுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato si' திருமடலின் தொகுப்புக்கு நடைபெற்றதைப் போலவே, இந்நடவடிக்கையும், வத்திக்கான் நிர்வாகத்துறை மற்றும், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளோடு நடத்திய நீண்டநாள் ஆய்வு மற்றும், அலசலின் பயனாக  சாத்தியமாகியுள்ளது என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் உரைத்துள்ளார்.

உலக நாடுகள், பல்வேறு பன்னாட்டு அமைப்புகள், அறிவியலாளர்கள், சமுதாயம், குறிப்பாக, தலைமுறைகளுக்கு இடையே ஒத்துழைப்பு என பல்வேறு நிலைகளின் ஒத்துழைப்போடுதான் நம் பூமிக்கோளப் பராமரிப்பு நடைபெறமுடியும் என்பதை திருத்தந்தை தன் திருமடலில் கூறியிருப்பதையும், திருப்பீடச் செயலர் குறிப்பிட்டுள்ளார்.

2050க்குள் கார்பன் வெளியேற்றம் குறைக்கப்பட

வத்திக்கான் நாடு, 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக குறைப்பதற்கும், அதேநேரம், ஒருங்கிணைந்த சூழலியல் கல்வியை ஊக்குவிப்பதற்கும்  தன்னை அர்ப்பணித்துள்ளது என்பதையும் உறுதிபட தெரிவித்தார், கர்தினால் பரோலின்.

சூழலியல் மனமாற்றம்

சிலே நாட்டில் காலநிலை பாதிப்பு
சிலே நாட்டில் காலநிலை பாதிப்பு

நாம் எதிர்கொள்ளும் சமூக-சூழலியல் நெருக்கடி களையப்படுவதற்கு, நம் மனமாற்றத்திற்கான நேரம் இதுவே எனவும், இதனை இன்னும் தள்ளிவைக்க முடியாது எனவும் உரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், சூழலியல் பாதுகாப்பு குறித்த பல்வேறு திட்டங்கள் வத்திக்கானில் ஏற்கனவே செயலில் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

கர்தினால் மைக்கிள் செர்னி

மேலும், இக்கூட்டத்தில் உரையாற்றிய ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், ஏழாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட தற்போதைய உலகளாவிய காலநிலை மோசமாக உள்ளது எனவும், இப்பூமிக்கோளம் ஏற்கனவே 1.2 செல்சியுஸ் டிகிரியை எட்டியுள்ளது எனவும், உலக அணு நிறுவனத்தின் அழைப்பையும் புறக்கணித்து, பல புதிய புதைபொருள் எரிசக்தி திட்டங்கள் இரக்கமின்றி நடைமுறையில் உள்ளன எனவும் கவலையோடு தெரிவித்துள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2022, 14:11