தேடுதல்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட நடவடிக்கைகள் மேலும் அவசியம்

“மனித சமுதாயத்தின் முழுமையான முகம்: ஒரு நீதியான சமுதாயத்திற்காக தலைமைத்துவத்தில் பெண்கள்” என்ற தலைப்பில் பாரிஸ் யுனெஸ்கோ தலைமையகத்தில் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.

மேரி தெரேசா: வத்திக்கான்

பெண்களின் தலைமைத்துவம், அவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்படுவதைச் சார்ந்துள்ளது என்று, பாரிஸ் நகரிலுள்ள யுனெஸ்கோவின் தலைமையகத்தில் நடைபெற்ற பெண்கள் பற்றிய கருத்தரங்கில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

“மனித சமுதாயத்தின் முழுமையான முகம்: ஒரு நீதியான சமுதாயத்திற்காக தலைமைத்துவத்தில் பெண்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் திருப்பீடத்தின் சார்பில் பங்குபெற்ற கர்தினால் பரோலின் அவர்கள் அக்டோபர் 27, இவ்வியாழனன்று ஆற்றிய உரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகளாவிய காரித்தாஸ் நிறுவனமும், யுனெஸ்கோவிற்குத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் அலுவலகமும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில், கல்வியின் பங்கு மற்றும், மனித சமுதாயத்திற்கு ஒரு கொடையாக உள்ள பெண்மையின் மதிப்பு குறித்து உரையாற்றினார், கர்தினால் பரோலின்.

வருவாய், இனம், பல்வேறு ஆபத்தான சூழல்கள் போன்றவை, பல சிறுமிகளும் இளம்பெண்களும் புறக்கணிக்கப்பட்டவர்களாய் இருப்பதற்கும், அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதற்கும் காரணமாகியுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார், கர்தினால் பரோலின்.

பெண்கள் கல்விபெறுவதற்குரிய உரிமையின்றி அவர்களின் முன்னேற்றம் குறித்து இடம்பெறும் எவ்விதக் கலந்துரையாடலும் பயனற்றதாகவே இருக்கும் எனவும் எச்சரிக்கைவிடுத்தார், திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

மேலும், இக்கருத்தரங்கில் உரையாற்றிய உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் பொதுச் செயலர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், தற்போது காரித்தாஸ் அமைப்பின் பணியாளர்களில் 53 விழுக்காட்டினர் பெண்கள் என்றும், அவர்களின் தலைமைத்துவத்தை அதிகரிக்க கூடுதலாக முயற்சிகள் அவசியம் என்றும் அறிவித்துள்ளார்.

“மனித சமுதாயத்தின் முழுமையான முகம்: ஒரு நீதியான சமுதாயத்திற்காக தலைமைத்துவத்தில் பெண்கள்”
“மனித சமுதாயத்தின் முழுமையான முகம்: ஒரு நீதியான சமுதாயத்திற்காக தலைமைத்துவத்தில் பெண்கள்”

பெண்களின் தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கு

மேலும், அக்டோபர் 28, இவ்வெள்ளியன்று நிறைவடைந்த இக்கருத்தரங்கில் உரையாற்றிய பல்வேறு முக்கிய பெண்ணுரிமை ஆர்வலர்கள், உலகெங்கும் பல பெண்கள், கடுமையான சூழல்கள் மற்றும், அநீதிகளை எதிர்கொள்ளும்வேளை, அனைவருக்கும் நீதியும் சமத்துவமும் இன்னும் அதிகமாக கிடைப்பதற்கு எல்லாரும் ஒன்றுசேர்ந்து உழைப்பதற்கு உறுதி எடுத்துள்ளனர்.

சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தலைமைத்துவம், மற்றும், தீர்மானம் எடுக்கும் நிலைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள், இத்தடைகளை அகற்றுவதற்குத் தேவையான யுக்திகளைப் பரிந்துரைத்தல் போன்ற நோக்கங்களுக்காக இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.  

இந்த இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் உலகமனைத்திலுமிருந்தும் முப்பதுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

உலகில் 11 கோடியே 50 இலட்சம் சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதில்லை. பெண்களின் உரிமைகள் மற்றும், தலைமைத்துவத்தை மேம்படுத்த உழைக்கும் நிறுவனங்களுக்கு மூன்று விழுக்காட்டுக்கும் குறைவான மனிதாபிமான நிதியே ஒதுக்கப்படுகிறது. உலகில் ஐந்து விழுக்காட்டுப் பெண்களே நிறுவனங்களின் தலைவர்களாக உள்ளனர் என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2022, 12:36