தேடுதல்

போரி்னால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் Odessa நகரம் போரி்னால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் Odessa நகரம்  (AFP or licensors)

திருத்தந்தையின் பெயரில் உக்ரைனுக்கு புதிய நன்கொடை

உக்ரைனில் பள்ளி ஆண்டு தொடங்கப்பட்டுள்ளவேளை, அந்நாட்டின் 5 இலட்சம் மாணவர்களும், 16 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களும் நாட்டிற்கு வெளியே உள்ளனர் – தலத்திருஅவை

மேரி தெரேசா: வத்திக்கான்

செப்டம்பர் 09, இவ்வெள்ளிக்கிழமையோடு உக்ரைனில், 198வது நாளாக போர் இடம்பெற்றுவரும்வேளை, அந்நாட்டில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை விநியோகம் செய்வதற்கென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்கு சிறிய வாகனம் ஒன்றை நன்கொடையாக அனுப்பியுள்ளார்.

"Praedicate Evangelium" என்ற புதிய திருத்தூது கொள்கைத் திரட்டின்படி, இவ்வாண்டு மார்ச் மாதத்தில் திருப்பீடத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிறரன்புப் பணிகளுக்கான துறையின் தலைவரான கர்தினால் Konrad Krajewski அவர்கள், போரினால் துன்புறும் உக்ரைன் மக்களோடு திருத்தந்தையின் உடனிருப்பைத் தெரிவிப்பதற்காக நான்காவது முறையாக அந்நாடு செல்லவுள்ளார்.

அச்சமயத்தில், கர்தினால் Krajewski அவர்கள், உக்ரைன் நாட்டின் Odessa, Žytomyr, Kharkiv ஆகிய நகர்ப் பகுதிகளுக்குச் சென்று, அங்கு வாழ்கின்ற பல்வேறு சமுதாயங்களின் கிறிஸ்தவர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், ஆயர்கள் போன்றோரைச் சந்தித்து, திருத்தந்தை அம்மக்களுக்கு அளித்துவரும் ஆதரவைத் தெரிவிப்பார் என திருப்பீட செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரி 24ம் தேதியிலிருந்து போர் இடம்பெற்றுவரும் உக்ரைனில் பணியாற்றும் காரித்தாஸ் அமைப்புகளின் உதவியோடு, கர்தினால் Krajewski அவர்கள் இம்மூன்று நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு துன்புறும் மக்களோடு செபித்து, திருத்தந்தையின் தோழமையுணர்வைத் தெரிவிப்பார் எனவும், அச்செய்தித் தொடர்பகம் மேலும் அறிவித்துள்ளது.

உக்ரைன் தலத்திருஅவை

இரஷ்யா உக்ரைன் மக்களுக்கு எதிராகப் போர்க் குற்றங்களை இழைத்து வருகிறது என்றும், ஆக்ரமிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து 25 இலட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 38 ஆயிரம் பேர் சிறார் என்றும், உக்ரைன் தலத்திருஅவை கூறியுள்ளது.

உக்ரைனில் பள்ளி ஆண்டு தொடங்கப்பட்டுள்ளவேளை, அந்நாட்டின் 5 இலட்சம் மாணவர்களும், 16 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களும் நாட்டிற்கு வெளியே உள்ளனர் எனவும், உக்ரைனில் 13 ஆயிரம் பள்ளிகள் வகுப்புக்களை ஆரம்பித்துள்ளன, ஆயினும் ஏறத்தாழ மூவாயிரம் பள்ளிகளே மாணவர்களை நேருக்குநேர் பார்க்கும் முறையில் வகுப்புக்களை நடத்தும் நிலையில் உள்ளன எனவும், அந்நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2022, 14:56