தேடுதல்

தென் சூடானில் கர்தினால் பரோலின் (2022.07.06)  தென் சூடானில் கர்தினால் பரோலின் (2022.07.06)  

கர்தினால் பரோலின்: திருஅவை போரை எதிர்க்கின்றது

திருத்தந்தையின் குரல், தொலைநோக்குப் பார்வைகொண்ட இறைவாக்குக் குரல், வளமான நிலத்தில் கனிதரும் விதையை விதைக்கும் குரல்போன்றது - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருஅவை அமைதியில் நம்பிக்கை வைத்து, அதனை உலகில் நிலவச்செய்வதற்கு உழைத்துவருவதால் அது போருக்கு எதிரானது என, பன்னாட்டு அரசியல் குறித்து அலசும் LIMES என்ற இத்தாலிய இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

கர்தினால் பரோலின் அவர்கள், திருப்பீடத்தின் தூதரகச் செயலாண்மை குறித்து வழங்கியுள்ள பேட்டியை, "பெரிய போர்" என்ற தலைப்பில் LIMES இதழ் வெளியிட்டுள்ளது.

திருப்பீடத்தின் தூதரகச் செயல்பாடுகள், ஒரு நாட்டோடு தொடர்புடையதல்ல, மாறாக, உலகளாவியச் சட்டத்திற்கு ஏற்றமுறையில் செயல்படுபவை எனவும், அவற்றுக்கு அரசியல், பொருளாதார, இராணுவம் ஆகியவற்றில் ஆர்வம் கிடையாது எனவும் கர்தினால் பரோலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருப்பீடச் செயலகம், உலகளாவியத் திருஅவையின் மேய்ப்பராகிய உரோம் ஆயரின் பணிகளுக்குத் தன்னைக் கையளித்துள்ளது என்று கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், திருப்பீடத் தூதரகங்களில் பணியாற்றுவோர், தெளிவான திருஅவைக் கண்ணோட்டத்தோடு, உலகிலுள்ள தலத்திருஅவைகளிலிருந்து திருத்தந்தையின் பிரதிநிதிகளாக இருப்பதால், திருப்பீடத்தின் செயலாண்மை, உலகளாவியத் தன்மை கொண்டது என்று எடுத்துரைத்துள்ளார்.

ஆயுதப் பயன்பாடு

குழப்பம் நிறைந்த ஓர் உலகில் திருஅவையின் உலகளாவியப் பண்பு வெளிப்படுவதற்கு திருப்பீடத் தூதரகங்கள் உழைத்து வருகின்றன எனவும், திருத்தந்தையும் உலகில் துண்டு துண்டாய் இடம்பெறும் மூன்றாம் உலகப் போர் குறித்து ஆண்டுகளாகப் பேசி வருகிறார் எனவும் கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.    

இவையனைத்திலும் திருப்பீடத் தூதரகங்கள், நற்செய்தியை, அதாவது, அமைதியை, அமைதியின் வாக்குறுதி மற்றும், அமைதி எனும் கொடையை அறிவிப்பதையே முதல் பணியாகக் கொண்டிருக்கின்றன என்றுரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், ஆயுதப் பயன்பாடு, போர்ப் பகுதிகளில் திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது போன்ற கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.

உலகின் பல பகுதிகளில் ஆயுதங்கள் கட்டற்றுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, போர், மனிதரின் இதயத்திலிருந்து பிறக்கின்றது, ஒவ்வொரு தாக்குதலும் அமைதியைத் தொலைவில் வைக்கின்றது, மற்றும், அமைதிக்கான எந்த உரையாடலையும் அது கடினமாக்குகின்றது என்றுரைத்துள்ள கர்தினால், இவ்விவகாரத்தில் திருத்தந்தையின் குரல், பலநேரங்களில் பாலைவனத்தில் அழுகின்ற குரலாக உள்ளது என்பதையும் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் குரல், தொலைநோக்குப் பார்வைகொண்ட இறைவாக்குக் குரல், வளமான நிலத்தில் கனிதரும் விதையை விதைக்கும் குரல் போன்றது, போரில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்கள், இக்குரலை கருத்தில் கொள்ளவில்லையெனில், போர் முடிவுராது என்று, கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2022, 16:10