தேடுதல்

Cooperaவில் அரசுத்தலைவர் மத்தரெல்லா, கர்தினால் பரோலின் Cooperaவில் அரசுத்தலைவர் மத்தரெல்லா, கர்தினால் பரோலின்  

கர்தினால் பரோலின்: ஆயுதங்களால் அமைதியைக் கட்டியெழுப்ப இயலாது

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவது குறித்து இந்நாள்களில் இத்தாலிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருவது பற்றிக் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், ஆயுதங்களால் அமைதியைக் கட்டியெழுப்ப முடியாது என்று கூறியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

போர், பசிப்பிரச்சனையை கூடுதலாக்கியுள்ளது, கோதுமை, இராணுவ ஆயுதமாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், உரோம் நகரில் ஜூன் 23, இவ்வியாழனன்று Coopera என்ற அமைப்பு நடத்திய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு என்ற இரண்டாவது இத்தாலிய தேசிய கருத்தரங்கில் கேட்டுக்கொண்டார்.

இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்களும் பங்குபெற்ற இக்கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படுவது குறித்து குறிப்பிட்டு, ஆயுதங்களால் அமைதியைக் கட்டியெழுப்ப இயலாது என்று கூறினார்.

மற்ற போர்களைப் போலவே, இத்தாலிக்கு அருகில் இடம்பெறும் உக்ரைன் போரும் பசி என்ற பெருந்துயரை உருவாக்கியுள்ளது மற்றும், வளர்ச்சியை குறைத்துள்ளது என்று உரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், கிழக்கு ஐரோப்பாவில் நடைபெறும் போர், உலக அளவில் ஏற்படுத்தியுள்ள கடும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார்.    

தூதரகம் வழியாகவே இப்பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வுகளைக் காண முடியும் எனவும், கோதுமை ஏற்றுமதியும், அது தேவைப்படும் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதும் தடைசெய்யப்படுவதை நிறுத்துவதற்கு, அனைத்து தரப்பிலும் அரசியல் ரீதியான நடவடிக்கை அவசியம் எனவும், கர்தினால் பரோலின் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.  

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவது குறித்து இந்நாள்களில் இத்தாலிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருவது பற்றியும் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், ஆயுதங்களால் அமைதியைக் கட்டியெழுப்ப முடியாது என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2022, 16:02