தேடுதல்

அருளாளர் Rosario Angelo Livatino  அருளாளர் Rosario Angelo Livatino  

போதைப்பொருளுக்கு அடிமையாவதன் காரணங்கள் கண்டறியப்பட...

1952ம் ஆண்டில் இத்தாலியின் சிசிலித் தீவில் பிறந்த நீதிபதியான Rosario ivatino அவர்கள், தன் பணிக் காலத்தில் ஊழல், மற்றும், திட்டமிட்ட மாஃபியா குற்றக்கும்பலுக்கு எதிராகப் போராடியவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலைக்கு இளையோரை இட்டுச்செல்லும் காரணங்கள்  கண்டறியப்படவேண்டும் என்று, இத்தாலியில் நடைபெற்ற போதைப்பொருள் குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு அனுப்பிய செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

மே 06, இவ்வெள்ளி பிற்பகலில், இத்தாலிய குடியரசின் செனட் அவையில் போதைப்பொருள் குறித்த "Droga. Le ragioni del no. La scienza, la legge, le sentenze" என்ற நூல் வெளியிடப்பட்ட நிகழ்வுக்கு, கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பிய செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Rosario Livatino ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில், போதைப்பொருளுக்கு அடிமையாவதால், பல எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன, எனவே இளையோர் அதற்கு அடிமையாவதற்கு உண்மையான காரணங்கள் என்னவென்று ஆராய்வது அவசியம் என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார். 

தனிமை, வாழ்வின் சவால்களை எதிர்கொள்வதில் குழப்பம், வாழ்வதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமை, குடும்பச்சூழல் போன்றவை, மனிதரை, குறிப்பாக, வளர்இளம் பருவத்தினர் மற்றும், இளையோரைப் போதைப்பொருளுக்கு அடிமையாக்குகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார், கர்தினால் பரோலின். 

வாழ்வதற்குக் காரணங்களைத் தேடுதல்

இந்நிலை திருஅவைக்கும் சவாலாக உள்ளது என்றும், மனிதரின் மாண்பு பற்றியும், உண்மையிலேயே விடுதலையளிக்கும் அம்சங்கள் பற்றியும் எடுத்துரைப்பதற்கும், போதைப்பொருளுக்கு அடிமையாவதால் இழக்கப்படும் மாண்பை மீட்டெடுப்பதற்கும் திருஅவை முயற்சிக்கின்றது எனவும், கர்தினால் பரோலின் அவர்களின் செய்தி கூறுகிறது.

"Droga. Le ragioni del no. La scienza, la legge, le sentenze" என்ற நூலை, Rosario Livatino ஆய்வு மையத்தின் உதவி இயக்குனர் Alfredo Mantovano அவர்கள் எழுதியுள்ளார்.

Rosario Angelo Livatino அவர்கள், 1952ம் ஆண்டில் இத்தாலியின் சிசிலித் தீவில் Canicattì என்ற ஊரில் பிறந்தார். நீதிபதியான இவர் தன் பணிக் காலத்தில் ஊழல், மற்றும், திட்டமிட்ட மாஃபியா குற்றக்கும்பலுக்கு எதிராகப் போராடியவர். அதனால் 1990ம் ஆண்டில் இவர் கொல்லப்பட்டார். 2021ம் ஆண்டு மே 9ம் தேதி இவர் அருளாளராக உயர்த்தப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2022, 16:12