தேடுதல்

ஹெய்ட்டி நாட்டில் நிவாரண அமைப்பின் உதவிகள் ஹெய்ட்டி நாட்டில் நிவாரண அமைப்பின் உதவிகள் 

உணவு நெருக்கடி களையப்பட நீடித்த நிலையான தீர்வுகள் அவசியம்

உலகில் நிலவும் பசிக்கொடுமையை அகற்றும் நோக்கத்தில், பசித் திட்டம் என்ற பெயரில் அரசு-சாரா அமைப்பு ஒன்று, 1977ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த அமைப்பே 2011ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி, முதன்முறையாக பசி உலக நாளைக் கடைப்பிடித்தது

மேரி தெரேசா: வத்திக்கான்

இவ்வுலகில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்கொள்ளப்படும் உணவு நெருக்கடியை அகற்றுவதற்கு, நீடித்த நிலையான நீண்டகாலத் தீர்வுகள் காணப்படவேண்டும் என்று, உலக பசி நாளில் அழைப்புவிடுப்பதாக, உலகளாவிய கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம் கூறியுள்ளது.  

மே 28, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக பசி நாளில் இவ்வாறு உலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டுள்ள காரித்தாஸ் நிறுவனம், காலநிலை மாற்றம், கோவிட்-19 பெருந்தொற்றின் எதிர்தாக்கம், மற்றும், போர்கள், குறிப்பாக உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரால், உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பசிக்கொடுமை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், உலகம் முழுவதிலும் கடுமையான விளைவுகளை, குறிப்பாக, உணவுப் பாதுகாப்பின்மையில் உருவாக்கியுள்ள நெருக்கடி குறித்து விளக்கியுள்ள காரித்தாஸ் நிறுவனம், உலகில் பசி அதிகரித்திருப்பதற்குக் காரணமான விடயங்களைக் களைவதற்கு, நீடித்த நிலையான யுக்திகளைச் செயல்படுத்துமாறு, அரசுகள் மற்றும், அனைத்துத் துறைகளிலுள்ள பங்குதாரர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது, காரித்தாஸ் நிறுவனம்.

உலகில் 81 கோடியே 10 இலட்சம் மக்கள் பசியோடு படுக்கைக்குச் செல்கின்றவேளை, ஏறத்தாழ 27 கோடியே 60 இலட்சம் மக்கள், கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையையும், ஆப்ரிக்காவின் சஹாரா, எத்தியோப்பியா, சொமாலியா, கென்யா நாடுகளில், இலட்சக்கணக்கான மக்கள் கடும் வறட்சி, மற்றும், பஞ்சத்தையும் எதிர்கொள்கின்றனர் என்றும், அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வெனெசுவேலா நாட்டில் பெருந்தொற்று காலத்தில் சிறார் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவு 26 விழுக்காடு அதிகரித்தது என்றும், 93 இலட்சம் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையிலும், 96 விழுக்காட்டு மக்கள், ஒரு நாளைக்கு 3 டாலருக்கும் குறைவான ஊதியத்தில் ஏழ்மையிலும் வாழ்கின்றனர் என்றும், சிரியாவில் 55 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 

குறுநில விவசாயிகள் உள்ளிட்ட, விளிம்புநிலையில் வாழ்வோர், மற்றும், ஏழைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனவும், உள்ளூர் உற்பத்தியாளர்கள், நுகர்வோர், குறிப்பாக, வளரும் நாடுகளில் 60 முதல் 80 விழுக்காட்டு உணவு உற்பத்திக்குப் பொறுப்பான பெண்கள் ஆகியோர், கொள்கைகளை உருவாக்கும் அமைப்புக்களில் இணைக்கப்படவேண்டும் எனவும் உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2022, 16:39