தேடுதல்

புனித வெள்ளியன்று திருத்தந்தை (10.04.2020) புனித வெள்ளியன்று திருத்தந்தை (10.04.2020) 

புனித வெள்ளி சிலுவைப் பாதையில் போரின் வேதனைகள் பகிர்வு

புகார்கள், நிச்சயமற்றதன்மைகள், தேவைகள், காயங்கள், துணிவு, மன்னிப்பு, இறைவேண்டல்கள், நம்பிக்கை போன்ற தலைப்புக்களில், 15 குடும்பங்கள், தங்களின் புனித வெள்ளி சிலுவைப் பாதை சிந்தனைகளை வழங்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

வருகிற புனித வெள்ளியன்று உரோம் பெருநகரின் கொலோசேயத்தில் நடைபெறும் சிலுவைப் பாதை பக்திமுயற்சியில், 15 குடும்பங்கள், போர், தங்களின் வாழ்வில் உருவாக்கியுள்ள கொடுமைகளையும், வேதனைகளையும் எடுத்துரைக்கவுள்ளனர் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது. 

கொலோசேயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் புனித வெள்ளி சிலுவைப் பாதை பக்திமுயற்சியில், புகார்கள், நிச்சயமற்றதன்மைகள், தேவைகள், காயங்கள், துணிவு, மன்னிப்பு, இறைவேண்டல்கள், நம்பிக்கை போன்ற தலைப்புக்களில் இக்குடும்பங்கள் தங்களின் சிந்தனைகளை, பகிர்ந்துகொள்ளும் எனவும் திருப்பீடம் கூறியுள்ளது.

திருத்தந்தையின் அன்பின் மகிழ்வு (Amoris Laetitia) திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டதன் 5ம் ஆண்டைமுன்னிட்டு, அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி இவ்வாண்டு உரோம் நகரின் கொலோசேயத்தில் நடைபெறும் புனித வெள்ளி சிலுவைப் பாதை தியானச் சிந்தனைகள், மற்றும், செபங்களைத் தயாரிக்கும் பொறுப்பை, கத்தோலிக்க குழுமங்கள் மற்றும், கழகங்களோடு தொடர்புடைய 15 குடும்பங்களிடம் ஒப்படைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 

குடும்ப வாழ்வின் முன்னேற்றம், அன்பின்றி மற்றும், அன்போடு வாழ்கின்ற சிறார், நோய், நீதித்தீர்ப்பு, தோல்வி, கைவிடப்படல், இழப்பு, போரின் அழிவு, நாளின் ஒளியை நம்பிக்கையோடு நோக்கவிருக்கும் புலம்பெயர்ந்தோர் என்ற வரிசையில், சிலுவைப்பாதை நிலைகளில் தியானச் சிந்தனைகள் இடம்பெறும்.

ஓர் இளம் தம்பதியர், தங்கள் நண்பர்களின் திருமணங்கள் தோல்வியடைவதைப் பார்க்கும்போது அடையும் மனவேதனை, அவர்களின் அன்பு சோதனைகளால் பரிசோதிக்கப்படுவது, திருமண வாழ்வைத் தொடர்ந்து நடத்திச்செல்வதில் எதிர்கொள்ளும் போராட்டங்கள் போன்றவற்றை, சிலுவைப் பாதையின் முதல்நிலையில் பகிர்ந்துகொள்வர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற புனித வெள்ளியன்று, உரோம் நேரம் இரவு 9.15 மணிக்கு, கொலோசேயத்தில் சிலுவைப் பாதை பக்திமுயற்சியை தலைமையேற்று நிறைவேற்றுவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 April 2022, 15:09