தேடுதல்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரின் அழிவுகள் உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரின் அழிவுகள்  

போரை முடிவுறச்செய்ய திருத்தந்தை எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரினால், சமுதாயம், அரசியல், திருஅவை, கிறிஸ்தவ ஒன்றிப்பு போன்ற துறைகள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் குறித்து C-9 அவை கலந்துரையாடல்களை நடத்தியது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருப்பீட தலைமையகத்தின் சீர்திருத்தம் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை கூறும் C-9 கர்தினால்கள் அவை, இவ்வாரத்தில் நடத்தி முடித்த கூட்டத்தில், இக்காலக்கட்டத்தில் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டது.

திருப்பீட தலைமையகம், மற்றும், அத்தலைமையகம், உலகளாவியத் திருஅவைக்கு ஆற்றும் பணிகள் குறித்த Praedicate evangelium என்ற திருத்தூது கொள்கை விளக்கம் வெளியிடப்பட்டதற்குப்பின் முதல்முறையாக கூட்டம் நடத்தியுள்ள இக்கர்தினால்கள் அவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில் முதல் அமர்வைத் துவக்கியது.

C-9 கர்தினால்கள் அவை, இவ்வாரத்தில் நடத்திய தன் 41வது கூட்டம் பற்றி, ஏப்ரல் 28, இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரினால், சமுதாயம், அரசியல், திருஅவை மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு போன்ற துறைகள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன என்று கூறப்பட்டுள்ளது.

உக்ரைனில் போரை நிறுத்துவதற்குத் தானும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும் மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் C-9 கர்தினால்கள் அவையிடம் விளக்கியபோது, அம்முயற்சிகளுக்கு அந்த அவை தன் ஆதரவை வெளியிட்டது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், C-9 கர்தினால்கள் அவையின் 41வது அமர்வில், திருப்பீட தூதரகப் பணியில், திருப்பீடத் தூதர்களின் பணிகள், Praedicate evangelium திருத்தூது கொள்கை விளக்கம் நடைமுறைப்படுத்தப்படுவது, காலநிலை மாற்றம், திருஅவையில் பெண்களின் பங்கு,  போன்ற தலைப்புக்களிலும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன

C-9 கர்தினால்கள் அவையின் அடுத்த அமர்வு, இவ்வாண்டு ஜூன் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஏப்ரல் 2022, 15:46