தேடுதல்

குண்டுவீச்சால் தாக்கப்பட்ட கீவ் நகரைச் சுத்தப்படுத்தும் பணியாளர்கள் குண்டுவீச்சால் தாக்கப்பட்ட கீவ் நகரைச் சுத்தப்படுத்தும் பணியாளர்கள்  (ANSA)

பணியாளர்களின் மாண்பு மதிக்கப்படவேண்டும்

இரஷ்யா, உக்ரைன் நாட்டை சட்டத்திற்குப் புறம்பேயும், கொடூரமாகவும் ஆக்ரமித்து நடத்திவரும் போர் உட்பட உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ அறுபது போர்கள் இடம்பெற்று வருகின்றன - ITUC

மேரி தெரேசா: வத்திக்கான்

மே 01, இஞ்ஞாயிறன்று தொழிலாளர் நாள் சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை, பணித்தளங்களில், தொழிலாளர் எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்றை கத்தோலிக்கத் தொழிலாளர் கழகங்களின் பிரதிநிதிகளோடு நடத்தியுள்ளது.

ஏப்ரல் 28, இவ்வியாழனன்று உரோம் நகரில் அமைந்துள்ள உலகளாவிய இயேசு சபையினரின் தலைமையகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், தொழிலாளர் கழகங்களின் தலைவர்கள் மற்றும், பிரதிநிதிகள் என 180 பேர் பங்குபெற்றனர்.

பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Kevin Farrell அவர்கள் துவக்கி வைத்த இந்நிகழ்வில், தொழிலாளரின் பல்வேறு சூழல்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் வேலைசெய்யும் இடங்களில், நியாயமான மற்றும், மாண்புள்ள சூழலில் பணியாற்ற ஊக்குவிக்கப்படவேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ILO எனப்படும் ஐ.நா.வின் உலக தொழில் நிறுவனத்தின் சமுதாய-சமய விவகாரங்களுக்கு, சிறப்பு ஆலோசகராக 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ள இயேசு சபை அருள்பணி Pierre Martinot-Lagarde அவர்கள், தரமான வேலை அமைவதற்குத் தேவையான பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்தார்.

உலக வர்த்தக கழகங்களின் கூட்டமைப்பு

மேலும், உலக தொழிலாளர் நாள் அல்லது மே தினம் பற்றி செய்திகளை வெளியிட்டுள்ள ITUC எனப்படும், உலக வர்த்தக கழகங்களின் கூட்டமைப்பு, உலகில் சமூக நீதியின்றி அமைதியை ஏற்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.

தொழில்கள், உரிமைகள், ஊதியங்கள், சமூகப் பாதுகாப்பு, சமத்துவம், அனைவரையும் இணைத்தல் ஆகியவற்றைக் கொண்ட புதிதொரு சமுதாய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட அமைதி மற்றும், சமூக நீதிக்காகத் தொடர்ந்து உழைப்பதற்கும், இவ்வாண்டு மே தினத்தில், இந்த கூட்டமைப்பு உறுதி எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இரஷ்யா, உக்ரைன் நாட்டை சட்டத்திற்குப் புறம்பேயும், கொடூரமாகவும் ஆக்ரமித்து நடத்திவரும் போர் உட்பட உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ அறுபது போர்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் ITUC கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2022, 16:43