தேடுதல்

திருத்தந்தையுடன் பேரருள்திரு Janusz S. Urbanczyk அவர்கள் திருத்தந்தையுடன் பேரருள்திரு Janusz S. Urbanczyk அவர்கள்  

திருத்தந்தையின் பிரதிநிதி பேரருள்திரு Urbanczyk அவர்கள் அறிக்கை

இன்றைய யூத எதிர்ப்பை எதிர்கொள்வதிலும், தவறான எண்ணங்களைப் போக்கி மனித மாண்பை வளர்ப்பதிலும், உரையாடல் பெருமளவு உதவமுடியும் : பேரருள்திரு Janusz S. Urbanczyk

செல்வராஜ் சூசைமாணிக்கம்

ஜனவரி 27, இவ்வியாழனன்று அனைத்துலக நாத்சி படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதை ஒட்டி திருத்தந்தையின் நிரந்தர பிரதிநிதி பேரருள்திரு Janusz S. Urbanczyk அவர்கள், OSCE நிரந்தர கவுன்சிலின் 1352வது கூட்டத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

Auschwitz-Birkenau நாத்சி படுகொலைகள் முகாமின் 77வது ஆண்டு நிறைவையொட்டி, அனைத்துலக நாத்சி படுகொலை நினைவு கூட்டமைப்பின (IHRA) பொதுச் செயலாளர் Dr. Kathrin Meyer அவர்களை வரவேற்று தன் உரையைத் தொடங்கினார் பேரருள்திரு Janusz S. Urbanczyk அவர்கள்.      

வரலாற்றில் நிகழ்ந்த இந்த வெறுக்கத்தக்க நாத்சி படுகொலை நிகழ்வு முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது என்று  கூறிய பேரருள்திரு Urbanczyk அவர்கள்,  முதலாவதாக, ஜனவரி 27, 1945 அன்று Auschwitz-Birkenau நாத்சி படுகொலை முகாம் கூட்டுப்படைகளால் விடுவிக்கப்பட்டதை நினைவுகூருதல் என்றும் இரண்டாவதாக, ஜெர்மன் நாத்சி ஆட்சியின் கைகளில் யூதர்கள் சிக்குண்டு மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டத்தையும் மற்றும் அழிக்கப்பட்டதையும் பிரிதிபலிப்பது என்றும் எடுத்துரைத்தார். 

 நாத்சி முகாமில் நடத்தப்பட்ட கொடூரமான செயல்கள், மக்களின் உள்ளார்ந்த மனித மாண்பை புறக்கணிப்பதன் ஆபத்தை மிகக் கடுமையாக நினைவூட்டுவதோடு, இது மீண்டும் நிகழாமல் இருக்க, ஒரு கூட்டு அர்ப்பணிப்பையும் வலியுறுத்துகிறது என்று எடுத்துக்காட்டினார் பேரருள்திரு Janusz S. Urbanczyk. 

இதுகுறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஜனவரி 26, இப்புதனன்று கல்வியாளர்களும், குடும்பங்களும், மனித வரலாற்றில் நிகழ்ந்த இந்த இருண்ட பக்கத்தின் கொடூரங்கள் பற்றிய விழிப்புணர்வை, இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்தவேண்டும் என்றும் அதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, அப்போதுதான் மனித மாண்பு மீண்டும் ஒருமுறை மிதிக்கப்படாத எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று கூறியதையும் நினைவு கூர்ந்தார் பேரருள்திரு Urbanczyk.

இன்றைய யூத எதிர்ப்பை எதிர்கொள்வதிலும், தவறான எண்ணங்களைப் போக்கி மனித மாண்பை வளர்ப்பதிலும், உரையாடல் பெருமளவு உதவமுடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்த திருத்தந்தையின் நிரந்தர பிரதிநிதி பேரருள்திரு Urbanczyk  அவர்கள்,  மற்றவரை வெளிப்படையாகச் சந்திக்க ஊக்குவிப்பதிலும், யூத மதத்தைப் பற்றி அறிய ஒரு வாய்ப்பை உருவாக்குவதிலும், இதனால் தவறான எண்ணங்களை முறியடித்து, மனிதகுலத்தின் அனைத்து மாந்தருக்கும் இடையிலான மிக  நெருக்கமான பிணைப்புகளை ஏற்படுத்துவதிலும் உரையாடல்களே பங்காற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

இறுதியாக,  நாத்சி முகாம் பற்றிய நமது நினைவலைகள் என்பது மனித மாண்பை  மேம்படுத்துவதற்கும் இந்த மாண்பை மறுக்கும் எந்த வகையான தவறான தகவலை எதிர்ப்பதற்கும் ஒரு தூண்டுதலை நமக்கு வழங்குகிறது என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார் பேரருள்திரு Urbanczyk.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2022, 15:53