தேடுதல்

திருத்தந்தையுடன் பேரருட்திரு Janusz Urbanczyk அவர்கள் திருத்தந்தையுடன் பேரருட்திரு Janusz Urbanczyk அவர்கள்  

OSCE அவைக்கு திருப்பீடத்தின் வாழ்த்துச் செய்தி

OSCE அவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள போலந்து நாட்டிற்குத் திருப்பீடம் தன் வாழ்த்தையும் வரவேற்பையும் வழங்கியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

OSCE எனப்படும், ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அவையின், தலைமைப் பொறுப்பை இவ்வாண்டில் போலந்து நாடு ஏற்றுள்ளது குறித்து திருப்பீடம் தன் வாழ்த்தையும் வரவேற்பையும் வழங்கியது.  

போலந்து நாட்டுக்குத் திருப்பீடம் சார்பில் வாழ்த்துக்களை வெளியிட்ட, வியன்னாவிலுள்ள பல்வேறு அனைத்துலக அமைப்புகளுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேரருட்திரு Janusz Urbanczyk அவர்கள், OSCE அமைப்பின் 57 உறுப்பினர் நாடுகளும் இப்புதிய ஆண்டு முன்வைக்கும் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் ஒன்றிணைந்து உழைப்பார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

போர்கள் மற்றும் மோதல்களின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருப்பது, காலநிலை மாற்றமும் சுற்றுச்சூழல்களும் சீர்கேடடைந்து வருவது ஆகியவைக் குறித்த கவலையை  திருத்தந்தை இவ்வாண்டிற்கான உலக அமைதி தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார் பேரருட்திரு Janusz Urbanczyk.

மேலும், இம்மாதம் திருப்பீடத்திற்கான பல நாடுகளின் அரசுத் தூதுவர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரையில், இன்றைய பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர்கொள்வதில் அனைத்துலக அமைப்புகளில் பலன்தரும் செயல்பாடுகள் குறைந்துள்ளன எனவும், கூட்டு மனப்பான்மையைவிட தனியாள் முடிவுகள் முன்னணியில் நிறுத்தப்படுகின்றன எனவும், கவலை வெளியிடப்பட்டதையும் எடுத்துரைத்தார் திருப்பீடப்  பிரதிநிதி.

மத விடுதலையின் முக்கியத்துவத்தையும் வலியுறுதிப் பேசிய பேரருட்திரு Janusz Urbanczyk அவர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள், மற்றும் ஏனைய மதத்தினருக்கு எதிரான பாகுபாட்டு நிலைகளும், மதசகிப்பற்ற தன்மைகளும் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த OSCE அமைப்பு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2022, 16:24