தேடுதல்

2ம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஜப்பானில் நினைவு அஞ்சலி 2ம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஜப்பானில் நினைவு அஞ்சலி 

அணு ஆயுத ஒழிப்பு கூட்டத்திற்கு கர்தினால் பரோலின் செய்தி

எது நம்மை உண்மையிலேயே பாதுகாக்கும் என்பதை மீள்பார்வை செய்வதற்கு, கோவிட்-19 பெருந்தொற்று நமக்கு பாடங்களைப் புகட்டியுள்ளது - கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழித்து, மனித மாண்பிற்கு முதலிடம் கொடுத்து, அமைதி மற்றும் வாழ்வு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், திருப்பீடம் முழுமையான ஆதரவு வழங்கும் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் கூறினார்.

அன்பு கலாச்சாரக் கழகம் என்ற பன்னாட்டு அமைப்பு ஒன்று, 'அணு ஆயுதங்களை மாற்றுதல், தகுந்த முயற்சி' என்ற தலைப்பில், அசிசி நகரில், நவம்பர் 17, இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தின் அறிமுக அமர்வில், கர்தினால் பரோலின் அவர்களின் காணொளிச் செய்தி ஒளிபரப்பானது.

'பாதுகாப்பு' என்ற காரணத்திற்காக இதுவரை நாம் அணு ஆயுதங்களை உருவாக்கி வந்துள்ளோம் என்பதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், எது நம்மை உண்மையிலேயே பாதுகாக்கும் என்பதை மீள்பார்வை செய்வதற்கு, கோவிட்-19 பெருந்தொற்று நமக்கு பாடங்களைப் புகட்டியுள்ளது என்று கூறினார்.

ஒருவரையொருவர் அழித்துவிடும் அச்சத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் பாதுகாப்பு நிலையற்றது என்றும், நீதி, சமத்துவம், உடன்பிறந்த நிலை ஆகிய உயரிய விழுமியங்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் பாதுகாப்பே மனித குலத்தை பாதுகாக்கும் என்றும், பெருந்தொற்று நமக்கு கற்றுத்தந்துள்ளது என்று, கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

மனித குலத்தின் பாதுகாப்பு, நம்மைச் சுற்றியுள்ள அனைத்து படைப்புகளின் பாதுகாப்பைச் சார்ந்திருக்கிறது என்பதையும் உணர்ந்துவரும் நாம், அணு ஆயுத ஒழிப்பின் வழியே, நமது பூமிக்கோளத்தையும் பாதுகாக்கமுடியும் என்ற உண்மையை விரைவாக உணர்வது முக்கியம் என்று, கர்தினால் பரோலின் அவர்களின் காணொளிச் செய்தி வலியுறுத்தியது.

கோவிட் பெருந்தொற்றிலிருந்து மீண்டுவரும் மனித சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன், அணு ஆயுதங்களுக்கு செலவிடப்படும் நிதியை, ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு பயன்படுத்தவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 54வது உலக அமைதி நாள் செய்தியில் கூறியுள்ளதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2021, 14:06