தேடுதல்

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் 

வத்திக்கானில், நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம்

சந்திப்பு கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படும் கண்காட்சிகளை, மக்கள் பார்வையிடும் வண்ணம் உதவி செய்வதற்கு, வத்திக்கானில், நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கண்காட்சி அரங்கத்தை திருத்தந்தை திறந்துவைக்கிறார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சந்திப்பு கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படும் கண்காட்சிகளை, மக்கள் பார்வையிடும் வண்ணம் உதவி செய்வதற்கு, வத்திக்கானில், நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 5, இவ்வெள்ளியன்று திறந்துவைக்கிறார் என்று, வத்திக்கான் நூலகத்தின் பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

வத்திக்கான் நூலகத்தின் ஒரு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி அரங்கத்தில், 'அனைவரும் - பயணிக்கும் மனித சமுதாயம்' என்ற பெயருடன் நிறுவப்பட்டுள்ள முதல் கண்காட்சியை, திருத்தந்தை அவர்கள், இவ்வெள்ளி மாலை 5 மணிக்குத் திறந்துவைக்கிறார்.

திருத்தந்தை அவர்கள் வெளியிட்டுள்ள 'அனைவரும் உடன்பிறந்தோர்' என்று பொருள்படும் Fratelli Tutti மடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'அனைவரும் - பயணிக்கும் மனித சமுதாயம்' என்ற கண்காட்சியை, Pietro Ruffo என்ற கலைஞர் உருவாக்கியுள்ளார்.

இன்றைய உலகிற்கு மிகவும் தேவைப்படும் சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்க்க, வத்திக்கான் நிறுவியுள்ள இந்த கண்காட்சி அரங்கத்தில் இடம்பெறும் கண்காட்சிகள், பல்வேறு கலாச்சாரங்களுக்கும், மொழிகளுக்கும், மதங்களுக்கும் இடையே சந்திப்பை உருவாக்கும் என்று தான் நம்புவதாக, வத்திக்கான் நூலகத்தின் இயக்குனரான கர்தினால் José Tolentino de Mendonça அவர்கள் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த மனித நேயப் புரவலர் Kirk Kerkorian அவர்கள் வழங்கியுள்ள நிதி உதவியுடன், வத்திக்கானில், நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கண்காட்சி அரங்கத்தில், திருத்தந்தையால் திறந்துவைக்கப்படும் 'அனைவரும் - பயணிக்கும் மனித சமுதாயம்' என்ற கண்காட்சி, 2022ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி முடிய நடைபெறும் என்று வத்திக்கான் நூலகம் அறிவித்துள்ளது.

உலகின் பழம்பெரும் நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படும் வத்திக்கான் நூலகம், 1475ம் ஆண்டு, திருத்தந்தை 5ம் நிக்கோலஸ் அவர்களால் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது என்று வரலாற்று குறிப்புகள் கூறினாலும், அதற்கு முன்னரே, அது செயலாற்றி வந்தது என்பது, மரபு வழி கருத்து.

04 November 2021, 14:43