தேடுதல்

பருத்தித் தோட்டத்தில் வேலை செய்யும் சிறுமி பருத்தித் தோட்டத்தில் வேலை செய்யும் சிறுமி 

குழந்தைகளை வியாபாரப் பொருள்களாக மாற்றும் முயற்சி

இவ்வுலகின் ஏதோ ஒரு மூலையில், ஒரு குழந்தை, தொழில் செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டாலும், அது, முழு மனித சமுதாயத்திற்கும் பெரும் இழுக்கு - அருள்பணி Arellano

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குழந்தைத் தொழிலை ஒழிப்பதும், எதிர்காலத்தை கட்டியெழுப்புவதும் ஒன்றோடொன்று தொடர்புடையது, ஏனெனில், கட்டாயத் தொழிலிலிருந்து காப்பாற்றப்படும் குழந்தைகள், வருங்கால மனித சமுதாயத்தை தகுந்த முறையில் கட்டியெழுப்புவர் என்பது உறுதி என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கூட்டமொன்றில் கூறினார்.

"குழந்தைத் தொழிலை ஒழித்தல், இன்னும் சீரிய எதிர்காலத்தை கட்டியெழுப்புதல்" என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை, நவம்பர் 19, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில், நடத்திய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனமான FAO நடத்தும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Fernando Chica Arellano அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

குழந்தைத் தொழில் ஒழிப்பு, குழந்தைகளின் அடிப்படை உரிமையைக் காக்கிறது, சமுதாய நீதியை உறுதி செய்கிறது, மற்றும் நன்னெறியை உயர்த்திப் பிடிக்கிறது என்ற மூன்று கோணங்களில், அருள்பணி Arellano அவர்கள், தன் உரையை வழங்கினார்.

மிகக் குறைந்த கூலிக்கு, குழந்தைகளை தொழிலில் ஈடுபடுத்தமுடியும் என்ற எண்ணம், குழந்தைகளை வியாபாரப் பொருள்களாக மாற்றுகிறது என்று சுட்டிக்காட்டிய அருள்பணி Arellano அவர்கள், இலாபம் ஒன்றையே முதன்மைப்படுத்தும் வர்த்தக உலகின் மிகப்பெரும் அநீதிக்கு,  குழந்தைகள் இவ்வாறு பலியாகின்றனர் என்று எடுத்துரைத்தார்.

குழந்தைகளை தொழிலில் ஈடுபடுத்துவது, அனைத்து நாடுகளிலும், சட்டப்படி தடைசெய்யப்பட்டிருந்தாலும், மனசாட்சியற்ற வர்த்தகர்கள், குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை மாற்றியமைப்பதில் துவங்கி, பல்வேறு அநீதிகளை மேற்கொள்கின்றனர் என்று, அருள்பணி Arellano அவர்கள், குறிப்பிட்டார்.

பெற்றோருக்கு தகுந்த ஊதியம் வழங்கப்பட்டால், தங்கள் குழந்தைகளை, அவர்கள், தொழிலில் ஈடுபடுத்தத் தேவையிருக்காது. எனவே, குழந்தைத் தொழில் ஒழிப்பு, பெற்றோரின் தகுந்த ஊதியத்துடன் தொடர்புடைய சமூக நீதியை வலியுறுத்துகிறது என்று அருள்பணி Arellano அவர்கள் சுட்டிக்காட்டினார்.

2021ம் ஆண்டு குழந்தை ஒழிப்பு அனைத்துலக ஆண்டாக கடைபிடிக்கப்படுவதை தன் உரையின் இறுதியில் குறிப்பிட்ட அருள்பணி Arellano அவர்கள், இவ்வுலகின் ஏதோ ஒரு மூலையில், ஒரு குழந்தை, தொழில் செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டாலும், அது, முழு மனித சமுதாயத்திற்கும் பெரும் இழுக்கு என்று கூறி, தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2021, 14:31