தேடுதல்

சூடானில் வன்முறைகளால் வறுமை நிலை சூடானில் வன்முறைகளால் வறுமை நிலை 

சூடான் நாட்டில் மனித மாண்பும் மனித உரிமைகளும் மதிக்கப்பட

தனிமனித மாண்பின் மீறமுடியாத் தன்மையை மதிப்பதன் வழியாகவும், உடன்பிறந்த உணர்வுடன்கூடிய உரையாடல்கள் வழியாகவும், உண்மை அமைதியை உருவாக்க முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சூடான் நாட்டில் அண்மையக் காலங்களில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள திருப்பீடம், மனித மாண்பும், மனிதர் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமைகளும் மதிக்கப்பட, அனைவரும் உழைக்க அழைப்பு விடுப்பதாக ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார், திருப்பீட அதிகாரி அருள்பணி John Putzer

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகம், மற்றும், அனைத்துலக அமைப்புகளில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும், அருள்பணி Putzer அவர்கள், சூடான் நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த கூட்டத்தில் நவம்பர் 5, வெள்ளிக்கிழமையன்று உரையாற்றியபோது இவ்வாறு விண்ணப்பித்தார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 32வது சிறப்புக் கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய அருள்பணி Putzer அவர்கள், கருத்து முரண்பாடுகளைக் களைவதற்கு, வன்முறை ஒருபோதும் நியாயமான தீர்வாக இருக்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்பும் திருப்பீடம், சூடான் நாட்டில் மனித மாண்பும் மனித உரிமைகளும் மதிக்கப்பட, அனைவரும் உழைக்கவேண்டுமென, திருப்பீடம் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

தனிமனித மாண்பின் மீறமுடியாத் தன்மையை மதிப்பதன் வழியாகவும், உடன்பிறந்த உணர்வுடன்கூடிய பேச்சுவார்த்தைகள் வழியாகவும், உண்மை அமைதியை உருவாக்கமுடியும் என்ற திருப்பீட அதிகாரி, இந்த உண்மை அமைதியின் உள்நோக்கமே, ஒன்றிணைந்த மனிதகுல வளர்ச்சியும் பொதுநலனுமாகும் என உரையாற்றினார்.

வாழ்வதற்கும், மத விடுதலைக்கும், அமைதியில் கூடுவதற்கும், சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதற்கும் இருக்கும் உரிமையை ஒடுக்குவது என்பது, நீதியான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு எதிராகச் செல்வதாகும் என தன் உரையில் குறிப்பிட்டார், திருப்பீட அதிகாரி, அருள்பணி Putzer.

அக்டோபர் 25, திங்கள்கிழமையன்று, சூடான் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அந்நாட்டில் தொடர்ந்துவரும் இராணுவ எதிர்ப்புப் போராட்டங்களின்போது, இராணுவத்தினர் சுட்டதில் இதுவரை 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 270க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் தொழிற்சங்க அமைப்புக்களின் ஒன்றிப்பு அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2021, 14:34