தேடுதல்

COP26 காலநிலை மாற்ற உலக உச்சி மாநாடு COP26 காலநிலை மாற்ற உலக உச்சி மாநாடு 

COP26: நம் பொதுவான இல்லம் குறித்த திருப்பீடத்தின் அக்கறை

COP26 உலக மாநாட்டில் இறுதியாக மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், இக்கால மற்றும், வருங்காலத் தலைமுறைகள் மீதுள்ள உண்மையான பொறுப்புணர்வால் தூண்டப்பட்டதாய் அமையும் - திருப்பீடம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP26 காலநிலை மாற்ற உலக உச்சி மாநாட்டில், காலநிலை மாற்றத்தின் நெருக்கடிகளைக் களைவதற்கு உலகத் தலைவர்கள் அறிவித்துள்ள தீர்மானங்களைப் பாராட்டியுள்ள திருப்பீடம், காலதாமதமின்றி அவற்றை நிறைவேற்றுமாறும், இனியும் காத்திருப்பதற்கு நேரம் கிடையாது எனவும் கூறியுள்ளது.

ஐ.நா.வின் இந்த இரு வார உலக மாநாடுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திருப்பீடம், இம்மாநாட்டில் இசைவுதெரிவிக்கப்பட காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவது, அதற்கு நிதியுதவி செய்வது, அதுசார்ந்த உறுதியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது ஆகிய மூன்று இலக்குகளை எட்டுவதற்குத் தேவையான ஆதரவும் ஊக்கமும் வழங்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த மூன்று இலக்குகள் எட்டப்படும் நடவடிக்கைகளில், வளர்ந்த நாடுகள் முன்னின்று வழிகாட்டவேண்டும் என்றும், திருப்பீடம் கூறியுள்ளது.

நவம்பர் 11, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஸ்காட்லாந்து கத்தோலிக்கருக்கென்று எழுதிய மடல் வெளியிடப்பட்ட ஒரு சிலமணி நேரங்களில், திருப்பீடம் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 12, இவ்வெள்ளியன்று நிறைவடைந்த  மாநாட்டில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தலைமையில், திருப்பீடப் பிரதிநிதிகள் குழு ஒன்று கலந்துகொண்டு, அம்மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய செய்தியையும் சமர்ப்பித்தது.

காலநிலை மாற்றம் மனிதருக்கு உருவாக்கியுள்ள நெருக்கடிகள், கடும் ஏழ்மையில் உள்ளவர்கள்மீதும், இந்த மாற்றத்திற்கு மிகக் குறைந்த அளவிலே காரணமானவர்கள் மீதும் அது ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கள் குறித்தும் திருத்தந்தை, அச்செய்தியில், தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த உலக மாநாட்டில் இறுதியாக மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், இக்கால மற்றும், வருங்காலத் தலைமுறைகள் மீதுள்ள உண்மையான பொறுப்புணர்வால் தூண்டப்பட்டதாய்,  வறியோரின் அழுகுரலுக்கு உண்மையிலேயே பதிலிறுப்பதாய், நம் பொதுவான இல்லத்தைப் பராமரிப்பதற்கு உதவுவதாய் அமையும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டுள்ள திருப்பீடம், இத்தீர்மானங்கள், காலநிலை மாற்றத்தால், மிக அதிகமான அழிவுகளை அடைந்துள்ள குழுமங்களுக்கு மிகவும் முக்கியம் எனவும் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2021, 16:09