தேடுதல்

குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலத்தில் ஆயர் பேரவை குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலத்தில் ஆயர் பேரவை 

மெக்சிகோவின் திருஅவைப் பேரவைக்கு கர்தினாலின் வாழ்த்து

இலத்தீன் அமெரிக்காவில் கிறிஸ்தவ நம்பிக்கை, சக்திவாய்ந்ததாக திகழ்வதால், தென் அமெரிக்கக் கண்டத்தை, 'எதிர்நோக்கின் கண்டம்' என்றழைப்பது பொருத்தமானது - கர்தினால் Ouellet

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 21 கடந்த ஞாயிறு முதல், 28, வருகிற ஞாயிறு முடிய, மெக்சிகோ நகரில் நடைபெறும் திருஅவைப் பேரவைக்கு, ஆயர்கள் பேராயத்தின் தலைவரும், இலத்தீன் அமெரிக்க பணிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் தலைவருமான கர்தினால் Marc Ouellet அவர்கள் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

உலக ஆயர்கள் மாமன்ற தயாரிப்புக்களின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தப் பேரவை வழியே, கத்தோலிக்கத் திருஅவை, மீண்டும் மக்களுக்கு செவிமடுக்கவும், தெளிந்து தெரிவு செய்யவும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளது என்று கர்தினால் Ouellet அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலத்தீன் அமெரிக்காவில் கிறிஸ்தவ நம்பிக்கை, சக்திவாய்ந்ததாக திகழ்வதால், தென் அமெரிக்கக் கண்டத்தை, 'எதிர்நோக்கின் கண்டம்' என்றழைப்பது பொருத்தமானது என்பதையும், கர்தினால் Ouellet அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பேரவைக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறன்று அனுப்பிய செய்தியில், அவர் கூறியிருந்த எண்ணங்களை, தன் செய்தியில் மீண்டும் நினைவுகூர்ந்துள்ள கர்தினால் Ouellet அவர்கள், பேரவையில் பங்கேற்போர், தங்கள் பணிகளிலிருந்து விடுபட்டு, ஒருவருக்கொருவர் செவிமடுக்கும் இந்த நாள்கள், தூய ஆவியாரால் வழிநடத்தப்படவேண்டும் என்ற வேண்டுதலையும் எழுப்பியுள்ளார்.

இலத்தீன் அமேரிக்கா மற்றும் கரீபியன் பகுதியின் பேரவை, நவம்பர் 21 ஞாயிறன்று, மெக்சிகோவின் புகழ்பெற்ற குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலத்தில், ஆயர்கள் நிறைவேற்றிய திருப்பலியுடன் துவங்கியது.

ஆயர்கள், அருள்பணியாளர்கள் இருபால் துறவியர், மற்றும் பொதுநிலையினர், கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, குறைந்த எண்ணிக்கையில் இந்தத் திருப்பலியில் பங்கேற்றாலும், இந்த பேரவை நாள்கள் அனைத்திலும், 200 ஆயர்கள், 400 அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர், மற்றும் 400க்கும் மேற்பட்ட பொதுநிலையினர், இணையம் வழியே பங்கேற்று வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2021, 13:59