தேடுதல்

கர்தினால் Kurt Koch, வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் கர்தினால் Kurt Koch, வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் 

சைப்ரஸ், கிரீஸ் திருத்தூதுப் பயணங்கள் ஒன்றிப்பை வளர்க்கும்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சைப்ரஸ், கிரீஸ் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், கிறிஸ்தவ ஒன்றிப்பை இன்னும் ஆழப்படுத்தும் பயணமாக அமையும் - கர்தினால் Kurt Koch

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சைப்ரஸ், கிரீஸ் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற கருத்தை இன்னும் ஆழப்படுத்தும் பயணமாக அமையும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

டிசம்பர் 2 வருகிற வியாழனன்று திருத்தந்தை துவக்கவிருக்கும் திருத்தூதுப் பயணத்தைக் குறித்து, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள், வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணலில், ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளுடன் கத்தோலிக்கத் திருஅவை கொண்டிருக்கும் உரையாடல் முயற்சிகளுக்கு இத்திருத்தூதுப் பயணம் பெரும் உந்துசக்தியாக அமையும் என்று கூறினார்.

சைப்ரஸ், கிரீஸ் ஆகிய இரு நாடுகளிலும் ஆர்த்தடாக்ஸ் சபைகளைச் சார்ந்தோர் பெருமளவில் வாழ்கின்றனர் என்பதை, தன் நேர்காணலின் துவக்கத்தில் சுட்டிக்காட்டிய கர்தினால் Koch அவர்கள், பல்வேறு ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே வளர்த்துவந்துள்ள உறவுகளை இன்னும் உறுதிப்படுத்த இந்த திருத்தூதுப் பயணம் உதவிசெய்யும் என்று கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவையும், பல்வேறு ஆர்த்தடாக்ஸ் சபைகளும், கருத்தளவில் வேறுபட்டிருந்தாலும், அண்மைய ஆண்டுகளில், இச்சபைகள் இணைந்து, பிறரன்புப் பணிகளை ஆற்றிவருவது, கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற இலக்கை நோக்கி மேற்கொண்டுள்ள பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்ட கர்தினால் Koch அவர்கள், இந்த பிறரன்புப்பணி பயணம் தொடர்ந்து நிகழ்வதற்கு திருத்தந்தையின் பயணம் பெரும் உந்துசக்தியாக அமையும் என்று குறிப்பிட்டார்.

குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோர், இத்திருத்தூதுப் பயணத்தின் முக்கிய அம்சங்களாக இருப்பர் என்பதை, தன் நேர்காணலில் சுட்டிக்காட்டிய கர்தினால் Koch அவர்கள், இவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவையும், ஆர்த்தடாக்ஸ் திருஅவையும் ஆற்றிவரும் பணிகள், திருத்தந்தையின் பயணத்தால் இன்னும் வெளிச்சத்திற்கு வரும் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2021, 14:37