தேடுதல்

யுனெஸ்கோவின்  75ம் ஆண்டு யுனெஸ்கோவின் 75ம் ஆண்டு  

யுனெஸ்கோவின் 41வது பொதுஅவையில் கர்தினால் பரோலின்

மத மரபுகளில், பொதுமக்களின் ஞானத்தில், இலக்கியத்தில், மற்றும், கலைகளில் புதைந்துகிடக்கும் ஞானத்தின் கருவூலங்கள், மனிதரின் இருப்புபற்றிய உண்மையை ஆழமாக வெளிப்படுத்துகின்றன - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

யுனெஸ்கோ எனப்படும், ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம் நடத்திவரும் 41வது பொது அவையில், நவம்பர் 13, இச்சனிக்கிழமையன்று உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அறிவியலும் தொழில்நுட்பமும் இயற்கைபற்றிய, குறிப்பாக, மனிதர்பற்றிய நம் அறிவின் எல்லைகள் ஆழப்படுத்தப்பட உதவினாலும், அவை நம் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்குப் போதுமானதாக இல்லை என்று கூறினார்.

மத மரபுகளில், பொதுமக்களின் ஞானத்தில், இலக்கியத்தில், மற்றும், கலைகளில் புதைந்துகிடக்கும் ஞானத்தின் கருவூலங்கள், மனிதரின் இருப்புபற்றிய உண்மையை ஆழமாக வெளிப்படுத்துகின்றன என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், அந்தக் கருவூலங்கள், மெய்யியல் மற்றும் இறையியலிலும் உள்ளன என்பதைக் கண்டுணர்கிறோம் என்றும் கூறினார்.

யுனெஸ்கோ நிறுவனம் துவக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவைமுன்னிட்டு, அந்நிறுவனம் பாரிஸ் மாநகரில், இம்மாதம் 9ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை நடத்திவரும் 41வது பொது அவையில், இச்சனிக்கிழமையன்று நடைபெற்ற கொள்கை பற்றிய கலந்துரையாடலில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.

உலகில் அமைதியை நிலைநிறுத்துவதன் வழியாகவே அனைவருக்கும் வளமான வருங்காலத்தை அமைக்க முடியும் என்ற உறுதிப்பாட்டில், மக்கள் மத்தியில் சந்திப்புக் கலாச்சாரத்தை கட்டியெழுப்ப, கடந்த 75 ஆண்டுகளாக அயராது உழைத்துவரும் யுனெஸ்கோ நிறுவனத்தின்மீது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் நன்மதிப்பையும் எடுத்துரைத்தார், கர்தினால் பரோலின்.

யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆண்டு நிறைவுப் பட்டியலில், 2022ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டுவரை நினைவுகூரப்படும் லிசிய நகர் குழந்தை தெரேசா, அர்மேனியக் கவிஞரான Nerses, the Gracious போன்ற புனிதர்களின் 150ம் ஆண்டு நிறைவுகளையும் இணைத்துள்ளதற்கு நன்றியையும், கர்தினால் பரோலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எல்லாரையும் உள்ளடக்குகின்ற மற்றும், தரமான கல்வியை மீண்டும் துவக்குதல், சூழலியல் கல்வி, செயற்கை அறிவின் நன்னெறி, அறிவியல், நம்பிக்கையின் கலாச்சார மரபு ஆகிய தலைப்புக்களில் தன் கருத்துக்களை எடுத்துரைத்த திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை, கல்விக்கு ஆற்றிவரும் பணிகளையும் விளக்கினார்.

கோவிட் பெருந்தொற்று, உலக அளவில், நூறு கோடிக்கு மேற்பட்ட சிறாரின் கல்வியைப் பாதித்துள்ளது என்றும், இந்நிலையை மீட்டெடுப்பதற்கு, அனைவருக்கும் கல்வி என்ற ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் இலக்கு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட கர்தினால் பரோலின் அவர்கள், இதனாலேயே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்வி குறித்த உலகளாவிய ஒப்பந்தத்திற்குத் தொடர்ந்து அழைப்புவிடுத்து வருகிறார் என்று கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவை, அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதற்கு தன்னை அர்ப்பணித்திருப்பதை உறுதிசெய்யும் வகையில், கல்வி குறித்த உலகளாவிய ஒப்பந்தத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளது எனவும், கர்தினால் பரோலின் அவர்கள், யுனெஸ்கோ நிறுவனம் நடத்தும் கூட்டத்தில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2021, 15:20