தேடுதல்

பிலிப்பீன்சில் கல்லறைத் தோட்டம் பிலிப்பீன்சில் கல்லறைத் தோட்டம் 

நவம்பர் மாதம் முழுவதும் நிறைபேறு பலன்கள்

இறந்த நம்பிக்கையாளர்கள் நினைவாக, பொதுவாக நவம்பர் மாதத்தின் முதல் 8 நாள்களும் நிறைபேறு பலன்கள் அறிவிக்கப்படும், ஆனால் பெருந்தொற்று விதிமுறைகள் காரணமாக, இவ்வாண்டு நவம்பர் மாதம் முழுவதும் அவை நீட்டிக்கப்பட்டுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகைவிட்டு மறைந்த நம்பிக்கையாளர்களுக்குப் பலனளிக்கும் முறையில், நிறைபேறுபலன்களைப் பெறுவதற்குரிய வாய்ப்புக்களை வழங்கியுள்ளது, Apostolic Penitentiary எனப்படும் திருஅவையின் மனசாட்சி திருப்பீடத்துறை.

உலக அளவில் தொடர்ந்து பரவிவரும் பெருந்தொற்று, அது தொடர்புடைய நலவாழ்வு மற்றும், பாதுகாப்பு விதிமுறைகளை முன்னிட்டு, உலகெங்கிலுமிருந்து ஆயர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், இவ்வாண்டு நவம்பர் மாதம் முழுவதும், இறந்த நம்பிக்கையாளர்களுக்காக, நிறைபேறு பலன்களை அறிவித்துள்ளதாக, அந்த திருப்பீடத்துறை, அக்டோபர் 28, இவ்வியாழனன்று கூறியுள்ளது.  

Apostolic Penitentiary திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Mauro Piacenza அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள விதிமுறையில், 2020ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 22ம் தேதி வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆன்மீக நலன்களையும், 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முழுவதற்கும் வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது, நவம்பர் மாதத்தில், ஒவ்வொரு நாளும் கல்லறைகளைச் சந்தித்தல், இறந்தோருக்காக இறைவேண்டல் செய்தல் ஆகியவை வழியாக இப்பலன்களைப் பெறலாம் எனவும் அதில் கூறியுள்ள கர்தினால் Piacenza அவர்கள், இறந்தோர் நினைவு நாளான நவம்பர் 2ம் தேதியும், வசதிக்கேற்ப, நவம்பர் மாதத்தின் ஏதாவது ஒரு நாளிலும், நம்பிக்கையாளர்கள் இப்பலன்களைப் பெறுவதற்கு இரண்டாவது நிறைபேறுபலன் ஒன்றையும் அறிவித்துள்ளார்.  

பொதுவாக, நவம்பர் மாதத்தின் முதல் 8 நாள்களும் நிறைபேறு பலன்கள் அறிவிக்கப்படும், ஆனால் பெருந்தொற்று விதிமுறைகள் காரணமாக, கடந்த ஆண்டு போலவே, இவ்வாண்டும், நவம்பர் மாதம் முழுவதும் அவை நீட்டிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

திருஅவை வழங்கும் நிறைபேறு பலன்களைப் பெறுவதற்கு, ஒப்புரவு அருளாடையாளத்தில் பங்குபெறுதல், திருப்பலியில் பங்குகொண்டு திருநற்கருணை அருந்துதல், திருத்தந்தையின் கருத்துக்களுக்காக இறைவேண்டல் செய்தல் ஆகியவை வரையறைகளாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2021, 16:20