தேடுதல்

சிரியா நாட்டு இளையோரைச் சந்தித்த கர்தினால் சாந்த்ரி சிரியா நாட்டு இளையோரைச் சந்தித்த கர்தினால் சாந்த்ரி  

சிரியா நாட்டின் தலத்திருஅவைக்கு திருத்தந்தையின் நிதி உதவி

சிரியா நாட்டின் தலத்திருஅவையில் மிக அதிகமான தேவையில் இருப்பவர்களுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1,70,000 டாலர்கள் நிதி உதவியை வழங்கியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியா நாட்டின் தலத்திருஅவையில் மிக அதிகமான தேவையில் இருப்பவர்களுக்காக 1,70,000 டாலர்கள், அதாவது, 1,27,50,000 ரூபாய் நிதி உதவியை வழங்கியுள்ளார் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், அந்நாட்டு ஆயர்களிடம் கூறினார்.

சிரியா நாட்டில், அக்டோபர் 26, இச்செவ்வாய் முதல், நவம்பர் 3ம் தேதி முடிய, மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ள கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவரான கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி (Leonardo Sandri) அவர்கள், தமஸ்கு நகரில், அந்நாட்டு ஆயர்களைச் சந்தித்த வேளையில், இத்தகவலை வெளியிட்டார்.

அந்நாட்டு தலத்திருஅவையில் அமைந்துள்ள 17 பகுதிகளில், ஒவ்வொரு பகுதிக்கும் 10,000 டாலர்கள் வழங்கப்படும் என்றும், இந்த நிதி உதவி, அப்பகுதிகளில் அதிகத் தேவையில் இருப்போரை சென்றடையவேண்டும் என்றும், கர்தினால் சாந்த்ரி அவர்கள் குறிப்பிட்டார்.

மேலும், சிரியாவின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் மற்றும் பிறரன்பு பணிகளில் ஈடுபட்டிருப்போருடன், வத்திக்கானின் பல்வேறு அவைகளின் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் ஒரு சந்திப்பை, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கீழை வழிபாட்டு முறை பேராயம் ஏற்பாடு செய்யும் என்றும், இச்சந்திப்பில், சிரியாவில் ஆற்றவேண்டிய பணிகள் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெறும் என்றும், கர்தினால் சாந்த்ரி அவர்கள் அறிவித்தார்.

சிரியா நாட்டின் திருப்பீடத்தூதராகப் பணியாற்றும், கர்தினால் மாரியோ செனாரி (Mario Zenari), ஆயர்கள், ஏனைய முதுபெரும் தந்தையர் ஆகியோர், சிரியாவில் நிலவிவரும் மிக நெருக்கடியானச் சூழலில், துணிவுடனும், அர்ப்பண உணர்வுடனும் ஆற்றிவரும் பணிகளுக்கு, கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் நன்றியை வெளியிட்டார்.

கர்தினால் சாந்த்ரி அவர்கள் ஆயர்களுடன் மேற்கொண்ட சந்திப்பைத் தொடர்ந்து, அந்தியோக்கியாவின் கத்தோலிக்க முதுபெரும் தந்தை யூசுஃப் அப்ஸி அவர்களுடன் திருவழிபாட்டை நிறைவேற்றினார்.

இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் இளையோர் நூறுபேரை சந்தித்து, அவர்களது, தற்போதைய கனவுகளையும், எதிர்காலக் கனவுகளையும் பற்றி கேட்டறிந்தார், கர்தினால் சாந்த்ரி.

தமஸ்கு நகருக்குப் பின், Tartous, Homs, Aleppo, Yabroud மற்றும் Maaloula ஆகிய நகரங்களில் தன் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொள்ளும் கர்தினால் சாந்த்ரி அவர்கள், நவம்பர் 3ம் தேதி வத்திக்கானுக்குத் திரும்புவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2021, 14:44