தேடுதல்

OSCE கூட்டங்களில் பங்கேற்கும் திருப்பீடப் பிரதிநிதி அருள்பணி Janusz S. Urbańczyk OSCE கூட்டங்களில் பங்கேற்கும் திருப்பீடப் பிரதிநிதி அருள்பணி Janusz S. Urbańczyk 

ஊழலை ஒழிப்பது, நல்லதொரு அரசின் மிக முக்கிய கடமை

ஊழல் என்ற நோய், அரசியல், நாடுகளின் எல்லை என்ற அனைத்து பிரிவுகளையும் கடந்து, செல்வம் மிகுந்த நாடுகளிலும், வறுமைப்பட்ட நாடுகளிலும், நீக்கமற நிறைந்துள்ளது - அருள்பணி Urbańczyk

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஊழலை ஒழிப்பது, நல்லதொரு அரசின் மிக முக்கிய கடமை என்பதை, திருப்பீடம் வலியுறுத்திக் கூற விழைகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், அக்டோபர் 18, இத்திங்களன்று, வியென்னாவில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கூட்டத்தில் கூறினார்.

ஐரோப்பாவில் பாதுகாப்பையும், கூட்டுறவையும் வளர்க்கும் நிறுவனமான OSCE ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், 'ஊழலுக்கு எதிர்ப்பும், நல்ல நிர்வாகமும்' என்ற தலைப்பில், வியென்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

1999ம் ஆண்டு, ஐரோப்பாவில் பாதுகாப்பையும், கூட்டுறவையும் வளர்க்கும் நோக்கத்துடன், OSCE நிறுவனம் உருவாக்கப்பட்ட வேளையில், ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் காரணிகளில், ஊழல் மிக முக்கியமானது என்று கூறப்பட்ட சொற்களை, அருள்பணி Urbańczyk அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஊழல் என்ற நோய், அரசியல், நாடுகளின் எல்லை என்ற அனைத்து பிரிவுகளையும் கடந்து, செல்வம் மிகுந்த நாடுகளிலும், வறுமைப்பட்ட நாடுகளிலும், நீக்கமற நிறைந்துள்ளது என்று கூறிய அருள்பணி Urbańczyk அவர்கள், இந்த நோயை, அரசுகளால் மட்டும் தடுத்து நிறுத்தமுடியாது என்றும், அனைத்து மக்களின் ஒத்துழைப்பும் தேவை என்றும், வலியுறுத்திக் கூறினார்.

மக்களின் நலனுக்கென உருவாக்கப்பட்டுள்ள அரசில் ஊழல்கள் நிலவும்போது, அதைக்காணும் மக்களின் உள்ளங்களில் நம்பிக்கை அற்றுப்போகிறது என்று கூறிய அருள்பணி Urbańczyk அவர்கள், இதன் விளைவாக,  மக்களின் நலனுக்கென அரசுகள் மேற்கொள்ளும் பல முயற்சிகள் தடைபடுகின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2021, 13:24