தேடுதல்

ஜெர்மனியின் நிலக்கரி மின்சக்திநிலையம் ஜெர்மனியின் நிலக்கரி மின்சக்திநிலையம் 

காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட

காலநிலை மாற்றம் உருவாக்கிவரும் நெருக்கடிகளைக் குறைப்பதற்கு, உலக நாடுகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புக்கு COP26 மாநாடு உதவும் என்று நம்புகிறேன் – கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றம் உருவாக்கிவரும் நெருக்கடிகளைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகள், உலக அளவில் மெதுவாக இடம்பெற்றுவரும்வேளை, அவற்றைத் துரிதப்படுத்துவதற்கு, COP26 எனப்படும், காலநிலை மாற்ற 26வது உலக உச்சி மாநாடு உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

அக்டோபர் 31, இஞ்ஞாயிறன்று கிளாஸ்கோவில் துவங்கவிருக்கும் COP26 உலக மாநாட்டில் கலந்துகொள்ளும் திருப்பீடப் பிரதிநிதிகள் குழுவிற்குத் தலைமைவகிக்கும் கர்தினால் பரோலின் அவர்கள், அவ்வுலக மாநாட்டில் திருப்பீடம் கலந்துகொள்வதன்  நோக்கம்பற்றி, அக்டோபர் 30, இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் கவலைகளைக் கருத்தில் ஏற்று, அம்மாற்றத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு அவசியம் என்பதை, COP26 உலக மாநாடு உறுதிப்படுத்தும் என்றும்,  கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

COP26 உலக மாநாடு, கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கியதற்குப்பின், காலநிலை மாற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் நிறுவனம் நடத்தும் முதல் உலக நிகழ்வு என்றும், 2015ம் ஆண்டு, பாரிஸ் நகரில் நடைபெற்ற உலக மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட, கிளாஸ்கோ மாநாட்டில் வலியுறுத்தப்படும் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார். 

ஒருங்கிணைந்த சூழலியலுக்கு ஆதரவாகவும், புதுப்பிக்கவல்ல எரிசக்திகள் பயன்படுத்தப்படுவதற்கும் குரல்கொடுத்துவரும் திருத்தந்தையின் விண்ணப்பம் நிறைவேற்றப்படுவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய அம்சங்கள்பற்றியும் எடுத்துரைத்தார், கர்தினால் பரோலின்.

பெருந்தொற்று, காலநிலை மாற்றம் ஆகிய இரண்டு விவகாரங்களும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு, பொதுநலனை ஊக்குவிக்கின்ற மற்றும், ஒவ்வொரு நடவடிக்கையிலும் மனிதர் மையப்படுத்தப்படவேண்டிய ஒரு கலாச்சார மாற்றம் தேவை என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள் வலியுறுத்திக் கூறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2021, 13:16