தேடுதல்

போஸ்னியாவில் புலம்பெயர்ந்தோர் போஸ்னியாவில் புலம்பெயர்ந்தோர்  (AFP or licensors)

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதிலுள்ள ஆபத்துக்கள்

பால்கன் பகுதி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு வருகின்ற புலம்பெயர்ந்தோர், வலைத்தளத்தில் கடத்தல்காரர்கள் வழங்கும் வாக்குறுதிகளை ஏற்பதால், பலநேரங்களில் குற்றக் கும்பல்களுக்குப் பலியாகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோரைக் கடத்துவதற்கு, வலைத்தளங்கள் வழியாக, ஒழுங்குமுறையின்றி செலுத்தப்படும் பண நடவடிக்கை ஏற்படுத்தியுள்ள ஆபத்துக்கள் குறித்து, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், UNODC எனப்படும், போதைப்பொருள் மற்றும், குற்றங்கள் தடுப்பு ஐ.நா. அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில் எடுத்துரைத்தார்.

புலம்பெயர்ந்தோர் கடத்தப்படல் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பாக உரையாற்றிய, வியன்னாவிலுள்ள ஐ.நா. மற்றும் அனைத்துலக அமைப்புக்களின் திருப்பீடப் பிரதிநிதியாகச் செயல்படும் அருள்பணி யானுஸ் உர்பான்சிஸ்க் அவர்கள் இவ்வாறு கூறினார்.

அண்மை ஆண்டுகளாக இடம்பெற்றுவரும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நடவடிக்கை, வெளிப்படைத்தன்மையை மோசமான நிலைக்கு உள்ளாக்கியுள்ளது என்றுரைத்த அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், இணையதளங்களில்  வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் நடவடிக்கைகளை அகற்றவும், தேசிய மற்றும், பன்னாட்டளவில் அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தங்களின் வலைத்தளங்கள் வழியாக பணம் அனுப்பும் மற்றும் பெறுகின்ற வாடிக்கையாளர்கள், தங்களைப்பற்றித் தெரிவிக்கவேண்டும் என்று சில வலைத்தளங்கள் நிர்ப்பந்திக்கின்றன என்றும், இது, முறையற்ற பணப்பரிமாற்றத்திற்கும், இணையம் வழியாக நடைபெறும் குற்றங்கள் பெருகவும், வாய்ப்புக்களை அதிகரித்துள்ளன என்றும் அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள் கூறினார்.

இந்நடவடிக்கைக்கு சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டுள்ள அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், பால்கன் பகுதி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு வருகின்ற புலம்பெயர்ந்தோர், கடத்தல்காரர்கள் வலைத்தளத்தில் வழங்கும் வாக்குறுதிகளை ஏற்கின்றனர் என்றும், இவர்கள், பலநேரங்களில் மனித வர்த்தகக் குற்றக் கும்பல்களுக்குப் பலியாகின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.

15 October 2021, 15:22