தேடுதல்

பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்பு மையம் திறப்பு நிகழ்வு பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்பு மையம் திறப்பு நிகழ்வு  (AFP or licensors)

மனித உரிமைகள் காக்கப்பட, ODIHR கூட்டத்தில் திருப்பீடம்

கிறிஸ்தவத்திற்கு எதிராக இடம்பெறும் குற்றங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது. சிறுபான்மை மற்றும், பெரும்பான்மை குழுமங்களைப் பாதிக்கும் வெறுப்பைத் தூண்டுகின்ற குற்றங்களும் களையப்படவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

"மூன்று பத்தாண்டுகள் மற்றும், வருங்கால சனநாயகத்திற்குத் தயாரித்தல், மனித உரிமைகள், மற்றும் பாதுகாப்பு" என்ற தலைப்பில், அக்டோபர் 14, இவ்வியாழன், 15, இவ்வெள்ளி ஆகிய இரு நாள்களில், OSCE எனப்படும், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அமைப்பின், சனநாயக நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைகள் அலுவலகமான ODIHR நடத்திய கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் மூன்று அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

வியன்னாவிலுள்ள ஐ.நா. மற்றும் அனைத்துலக அமைப்புக்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையில், ODIHR அலுவலகம் மனித உரிமைகள் காக்கப்படுவதற்கு, கடந்த முப்பது ஆண்டுகளாக, பாரபட்சமின்றி நேர்மையோடு ஆற்றிவரும் நற்பணிகளுக்கு, திருப்பீடம், தன் நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆயினும், சில நாடுகள், மனித உரிமைகளைக் காப்பதில், சமநிலை காப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ள திருப்பீடம், அனைவரின் மனித உரிமைகள், மற்றும், அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாத்து, ஊக்குவித்தல் பற்றி நடைபெற்ற இரண்டாவது அமர்விலும் தன் எண்ணங்களைப் பதிவுசெய்தது.

மனித உரிமைகள், உலகளாவியதன்மை கொண்டது, இது இன்றியமையாதது, மற்றும் மீறப்படமுடியாதது என்றும், இந்த உரிமைகள் குறித்த உலகளாவிய அறிக்கை பலன்தரவேண்டுமெனில், அது நடைமுறைப்படுத்தப்படவேண்டும், ஆனால் உலகின் பல பகுதிகளில் அடிப்படை மனித உரிமைகள் கடுமையாய் மீறப்படுகின்றன என்றும், திருப்பீடத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

சனநாயக விதிமுறைகளைக் கொண்ட அரசுகளில்கூட, இந்த உரிமைகள் எப்போதும் முழுமையாக மதிக்கப்படுவதில்லை என்றுரைத்துள்ள அவ்வறிக்கை, உலக அளவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை ஊக்குவிப்பதில், OSCE அமைப்பு, முயற்சிகள் மேற்கொண்டுவருவதை திருப்பீடம் உணர்ந்தே உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சகிப்பற்றதன்மை மற்றும், பாகுபாடுகளின் அனைத்துவிதமான வடிவங்களைக் களைவது, எல்லாரையும் உள்ளடக்கிய சமத்துவ சமுதாயங்களைக் கட்டியெழுப்புவது குறித்து நடைபெற்ற மூன்றவாது அமர்விலும் திருப்பீடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

கிறிஸ்தவத்திற்கு எதிராக இடம்பெறும் குற்றங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது எனவும், சிறுபான்மை மற்றும், பெரும்பான்மை குழுமங்களைப் பாதிக்கும், வெறுப்பைத் தூண்டுகின்ற குற்றங்களையும், சகிப்பற்றதன்மை மற்றும், பாகுபாட்டின் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் களைவதற்கு முயற்சிகள் அவசியம் எனவும் அவ்வறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ODIHR அலுவலகம் உருவாக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தக் கூட்டத்தை போலந்து நாடு ஏற்பாடு செய்து நடத்தியது.

16 October 2021, 15:10