தேடுதல்

16வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புப் பணிகளின் ஆரம்பம் 16வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புப் பணிகளின் ஆரம்பம் 

மாமன்றத் தயாரிப்பின் முதல்நிலை கால அளவு நீட்டிப்பு

மாமன்றத்தின் முதல்நிலை செய்முறைகளில், கிறிஸ்தவ ஒன்றிப்பு அம்சங்களையும் உறுதிசெய்வதற்கு உதவியாக, சில நடைமுறை வழிகாட்டிகள் கொண்ட மடல் ஒன்று, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில், 2023ம் ஆண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, இம்மாதம் 17ம் தேதி, உலக அளவில் துவக்கப்பட்டுள்ள ஈராண்டு தயாரிப்புக்களின் முதல்நிலையின் காலக்கெடுவை, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை நீட்டித்துள்ளது, ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகம்.

இந்நடவடிக்கை குறித்து அக்டோபர் 29, இவ்வெள்ளியன்று அறிக்கை வெளியிட்ட மாமன்றத்தின் பொதுச் செயலகம், தற்போது துவக்கப்பட்டுள்ள மாமன்றத்தின் முதல்நிலை செய்முறையில், செவிமடுத்தல் மற்றும், உரையாடலின் ஓர் உண்மையான அனுபவத்தை, இறைமக்கள் அனைவரும் பெறுவதற்கு உதவியாக, இந்த காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.  

காலக்கெடுவை நீட்டிக்கவேண்டும் என்று, பல்வேறு பகுதிகளிலிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதையடுத்து, உலகின் அனைத்து ஆயர் பேரவைகள், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள், மற்றும், ஏனைய திருஅவைக் குழுமங்கள் ஆகியவை, முதல்நிலை செய்முறையின் தொகுப்புக்களைச் சமர்ப்பிப்பதற்குரிய காலக்கெடுவை, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை நீட்டித்துள்ளது, அப்பொதுச் செயலகம்.

இதற்கு முன்னதாக, முதல்நிலை தயாரிப்புத் தொகுப்புக்கள் சமர்ப்பிக்கவேண்டிய காலக்கெடுவை 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்றும் அப்பொதுச் செயலகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக் குழுக்கள்

மேலும், 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல்நிலை செய்முறைகளில், கிறிஸ்தவ ஒன்றிப்பு அம்சங்களையும் உறுதிசெய்வதற்கு உதவியாக, சில நடைமுறை வழிகாட்டிகள் கொண்ட மடல் ஒன்று, உலகின் ஆயர் பேரவைகளின் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக் குழுக்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் மாரியோ கிரெக் அவர்களும், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கர்ட் கோக் அவர்களும் இணைந்து இம்மடலை அனுப்பியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2021, 13:23