தேடுதல்

Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளையின் தலைவர் அன்ன மரியா தரந்தோலா Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளையின் தலைவர் அன்ன மரியா தரந்தோலா 

"Centesimus Annus" 30ம் ஆண்டு நிறைவு கருத்தரங்கு

கோவிட் பெருந்தொற்றை தொடர்ந்து நாம் வாழப்போகும் காலத்தில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பாமல், ஒன்றிணைப்பு, கூட்டுறவு, மற்றும் பொறுப்பு நிறைந்த எதிர்காலத்தை உருவாக்க – வத்திக்கான் கருத்தரங்கு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் பெருந்தொற்றுக்குப்பின் தொடரும் காலத்தில் உருவாகும் ஏற்றத்தாழ்வுகள், அநீதிகள், புறக்கணிப்புகள் ஆகிய சமுதாய பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடும் வழிகளைப் பரிந்துரைக்கும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கு, வத்திக்கானில் நடைபெறுகிறது.

அக்டோபர் 21, மற்றும் 22 ஆகிய இருநாள்கள் நடைபெறும் இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளை, "ஒன்றிணைப்பு, கூட்டுறவு, மற்றும் பொறுப்பு" என்ற மூன்று விழுமியங்களை, இக்கருத்தரங்கின் மையக் கருத்துக்களாக தெரிவு செய்துள்ளது.

திருஅவையின் சமுதாயக் கோட்பாடுகளை உள்ளடக்கி, திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் 1891ம் ஆண்டு வெளியிடப்பட்ட Rerum novarum என்ற திருமடல் வெளியானதன் 100வது ஆண்டில், 'நூறாவது ஆண்டு' என்று பொருள்படும் "Centesimus Annus" என்ற திருமடலை, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1991ம் ஆண்டு வெளியிட்டார்.

"Centesimus Annus" வெளியானதன் 30ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க, வத்திக்கானில் நடைபெற்ற கருத்தரங்கில், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், மற்றும், அறிவியல், சுற்றுச்சூழல், கல்வி, பொருளாதாரம் என்ற பல துறைகளைச் சார்ந்த அறிஞர்களும் கலந்துகொண்டனர்.

2018ம் ஆண்டு இயற்பியலில் நொபெல் விருது பெற்ற Gérard Mourou, CERN எனப்படும் ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், Fabiola Gianotti, இத்தாலியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் Roberto Cingolani ஆகியோர் உட்பட பல அறிஞர்கள் இக்கூட்டத்தில் உரையாற்றினர்.

இக்கருத்தரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள Laudato sì, Fratelli tutti மற்றும் Caritas in Veritate ஆகிய மூன்று திருமடல்களின் எண்ணங்கள் பகிர்ந்துகொள்ளப்படும் என்று, இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

கோவிட் பெருந்தொற்றை தொடர்ந்து நாம் வாழப்போகும் காலத்தில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பாமல், ஒன்றிணைப்பு, கூட்டுறவு, மற்றும் பொறுப்பு நிறைந்த எதிர்காலத்தை உருவாக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் திருமடல்கள் வழியே வழங்கியுள்ள கருத்துக்கள், இக்கருத்தரங்கை வழிநடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2021, 15:08