தேடுதல்

செர்பியா மற்றும், வத்திக்கான்: 1878-1914 அருங்கட்சியகம் செர்பியா மற்றும், வத்திக்கான்: 1878-1914 அருங்கட்சியகம் 

செர்பியா மற்றும், வத்திக்கான்: 1878-1914 அருங்காட்சியகம்

1920ம் ஆண்டில், செர்பியர்கள், குரோவேஷியர்கள், சுலோவேனியர்கள் ஆகிய இனங்களைக் கொண்ட முடியரசோடு திருப்பீடம் தூதரக உறவுகளை உருவாக்கியது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

1920ம் ஆண்டில், செர்பியர்கள், குரோவேஷியர்கள், சுலோவேனியர்கள் ஆகிய இனங்களைக் கொண்ட முடியரசோடு திருப்பீடம் உருவாக்கிய தூதரக உறவுகளின் நூறாம் ஆண்டை சிறப்பிக்கும் விதமாக, திருப்பீடத்திற்குப் பணியாற்றும் செர்பியக் குடியரசின் தூதரகம் அருங்காட்சியகம் ஒன்றைத் திறந்துள்ளது.

உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், “செர்பியா மற்றும், வத்திக்கான் 1878-1914” என்ற தலைப்பில், அக்டோபர் 18, இத்திங்கள் மாலையில் நடைபெற்ற இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில், திருப்பீடத்தின் சார்பில் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களும், செர்பியா நாட்டின் சார்பில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் Nikola Selaković அவர்களும்  கலந்துகொண்டு உரையாற்றினர்.

இந்நிகழ்வில் சிறிய உரையொன்று ஆற்றிய பேராயர் காலகர் அவர்கள், திருப்பீடத்திற்கும், செர்பியாவிற்கும் இடையே கடந்த 36 ஆண்டுகளாக நிலவும் தூதரக உறவுகள், கலந்துரையாடலை எவ்வாறு ஊக்குவித்து காத்துவந்துள்ளன என்பது குறித்து எடுத்துரைத்தார்.

திருப்பீடத்திற்கும், பால்கன் பகுதி மக்களுக்கும் இடையேயுள்ள உறவுகளின் சவாலானநிலை, அப்பகுதியின் சிக்கலான அரசியல் கட்டமைப்பிற்குள், தொடர்ச்சியான, மற்றும், குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை ஒருபோதும் இழந்ததில்லை என்றும் பேராயர் காலகர் அவர்கள் குறிப்பிட்டார்.

பன்னாட்டு உறவுகளின் வரலாறு குறித்து இடம்பெறும் ஆய்வுகள், புதிய தலைமுறைகளுக்குத் தூண்டுதலாகவும், இவை, ஒருவர் ஒருவரிடையே ஒத்துழைப்பு மற்றும், பொது நலனைத் தேடுவதன் அடிப்படையில் சமுதாயம் கட்டியமைக்கப்பட உதவுவதாகவும் இருக்கும் என்று தான் நம்புவதாக, பேராயர் காலகர் அவர்கள் கூறினார்.

இத்திங்கள் மாலையில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பல ஆவணங்கள், இதுவரை பொதுமக்கள் அறியாதவை எனவும், இவை 1878ம் ஆண்டிலிருந்து செர்பியாவிற்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவிய உறவுகள் பற்றியவை எனவும் கூறப்பட்டுள்ளது. 1878ம் ஆண்டில், பெர்லினில் நடைபெற்ற மாநாட்டில் செர்பியா, தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலை, முதல் உலகப்போர் துவங்கும்வரை நீடித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2021, 14:34