தேடுதல்

திருத்தந்தை, 'விசுவாசப் பரப்புதல் சபையை' உருவாக்கிய Pauline Jaricot திருத்தந்தை, 'விசுவாசப் பரப்புதல் சபையை' உருவாக்கிய Pauline Jaricot  

Jaricotன் மறைப்பரப்பு ஆர்வம், இக்காலத்திற்கு எடுத்துக்காட்டு

2022ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதியன்று, பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் Pauline Jaricot அவர்கள் அருளாளராக உயர்த்தப்படுவார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

'விசுவாசப் பரப்புதல் சபையை' உருவாக்கிய இளம்பெண் Pauline Jaricot அவர்களிடம் ஏற்பட்டிருந்த மறைபரப்புப்பணி ஆர்வம், இக்காலத்திற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் செயலரும், பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளின் (PMS) தலைவருமான பேராயர் ஜியாம்பியெத்ரோ தால் தோசா (Giampietro Dal Toso) அவர்கள் கூறினார்.

அக்டோபர் 24, இஞ்ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்படும் 95வது உலக மறைபரப்புப்பணி நாளையொட்டி, அக்டோபர் 21, இவ்வியாழனன்று இடம்பெற்ற இணையவழி நேரடி ஒளிபரப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில், Pauline Jaricot அவர்கள் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டபோது, பேராயர் தால் தோசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

2022ம் ஆண்டில் Pauline Jaricot அவர்கள் அருளாளராக உயர்த்தப்படும் நிகழ்வு உட்பட, அவ்வாண்டில் மறைபரப்புப்பணி உலகோடு தொடர்புடைய பல்வேறு ஆண்டு நிறைவுகள் இடம்பெறவுள்ளதையும் பேராயர் தால் தோசா அவர்கள் குறிப்பிட்டார்.

'விசுவாசப் பரப்புதல் சபை' ஆரம்பிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு, முதல் மறைபரப்புப்பணி கழகம் துவங்கப்பட்டதன் 200ம் ஆண்டு, இந்த கழகத்தின் நான்கில் மூன்று, பாப்பிறை சபையாக உயர்த்தப்பட்டதன் 100ம் ஆண்டு, பாப்பிறை மறைப்பரப்புப்பணி ஒன்றியத்தை உருவாக்கிய அருளாளர் Paolo Manna பிறந்ததன் 150ம் ஆண்டு ஆகிய முக்கிய நிகழ்வுகள், 2022ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவுள்ளன என்று கூறினார், பேராயர் தால் தோசா.

2022ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதியன்று, பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் Pauline Jaricot அவர்கள் அருளாளராக உயர்த்தப்படுவார் என்றும், அவருக்கு 23 வயது நடந்தபோது 'விசுவாசப் பரப்புதல் சபை' பற்றிய எண்ணம் உருவானது என்றும், இச்சபையே பின்னாளில், 'விசுவாசப் பரப்புதல் பாப்பிறை சபை'யாக மாறியது என்றும், பேராயர் தால் தோசா அவர்கள் அறிவித்தார்.

'விசுவாசப் பரப்புதல் சபை'

Pauline Jaricot அவர்கள் ஆரம்பித்த 'விசுவாசப் பரப்புதல் சபை' திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களால் விரைவில் அங்கீகரிக்கப்பட்டது. அச்சபை, 1825ம் ஆண்டில், நான்காயிரம் பிராங்க் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டு, பிரான்ஸ் அரசரின் பாதுகாவலில்  வைக்கப்பட்டது. 1822ம் ஆண்டில் 22.915 பிராங்குகளும், 1838ம் ஆண்டில் 1.343.000 பிராங்குகளும், அதற்கு ஈராண்டுகள் சென்று 25 இலட்சம் பிராங்குகளும் அச்சபைக்கு நன்கொடைகளாக கிடைத்தன.

1922ம் ஆண்டு திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 'விசுவாசப் பரப்புதல் சபை' என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் வழியே மறைபரப்புப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்குத் தேவையான நிதியை, இச்சபையினர் திரட்டுவதற்கு இசைவளித்தார்.

இச்சபையின் விண்ணப்பத்தை ஏற்று, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1926ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி, மறைபரப்புப்பணிக்கென மக்கள் இறைவேண்டல் புரிவதற்காக ஒரு ஞாயிறை, ‘மறைபரப்புப்பணி ஞாயிறு’ என்று உருவாக்கியதையடுத்து, இவ்வாண்டு 95வது மறைபரப்புப்பணி ஞாயிறு சிறப்பிக்கப்படுகிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2021, 15:37