தேடுதல்

கோவிட்-19  தடுப்பூசி கோவிட்-19 தடுப்பூசி 

உடன்பிறந்த உணர்வு மேலோங்கிய ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப...

கோவிட்-19 பெருந்தொற்று, நாம் எவ்வளவு சக்தியற்றவர்கள் என்பதையும், நாம் ஒருவர் ஒருவரைச் சார்ந்திருக்கிறோம் என்பதையும் உணர்த்திவருகிறது - அருள்பணி உர்பான்சிஸ்க்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உடன்பிறந்த உணர்வு மேலோங்கிய ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப, கோவிட்-19 பெருந்தொற்று காலம், நல்லதொரு வாய்ப்பு என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐரோப்பிய கூட்டம் ஒன்றில் கூறினார்.

“மனித உரிமைகளும், பொதுவான நலவாழ்வும்: ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே பகிர்ந்துகொண்ட அனுபவங்கள், மற்றும், கற்றுக்கொண்ட பாடங்கள்” என்ற தலைப்பில், வியன்னாவில், செப்டம்பர் 21, இச்செவ்வாய், 22 இப்புதன் ஆகிய இரு நாள்கள், OSCE எனப்படும், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அமைப்பு, மெய்நிகர் கூட்டம் ஒன்றை நடத்துகிறது.

அக்கூட்டத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய, OSCE அமைப்பில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் அருள்பணி யானுஸ் உர்பான்சிஸ்க் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று, நாம் எவ்வளவு சக்தியற்றவர்கள் என்பதையும், நாம் ஒருவர் ஒருவரைச் சார்ந்திருக்கிறோம் என்பதையும் உணர்த்திவருகிறது என்று கூறினார்.

நகர்ப்புறங்களில் அமைந்துள்ள சேரிகள், புலம்பெயர்ந்தோர் முகாம்கள், சிறைகள் போன்ற இடங்களில் ஏழைகள், புலம்பெயர்ந்தோர், கைதிகள் ஆகியோர் மிக நெருக்கமாக வாழ்ந்து வரும் நிலை அகற்றப்படவேண்டும் என்றும், அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்த மக்களுக்கு தடுப்பூசிகள், நலவாழ்வு பாதுகாப்பு போன்றவை தேவைப்படுகின்றன  என்பதை வலியுறுத்திக் கூறிய அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், வேலை செய்யும் பெண்களுக்கு அதிகளவில் ஆதரவளிக்கப்படுமாறும் விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2021, 15:53