தேடுதல்

வறியோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளைப் பார்வையிடும் திருத்தந்தை, கர்தினால் Krajewski வறியோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளைப் பார்வையிடும் திருத்தந்தை, கர்தினால் Krajewski  (AFP or licensors)

திருத்தந்தையின் தர்மப்பணித் துறை - கோடை விடுமுறை பணிகள்

உரோம் நகரில் வாழும் வீடற்றோரை, கடற்கரை, ஏரிகள், மற்றும் திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான Castel Gandolfo ஆகிய இடங்களுக்கு சுற்றுலாவாக அழைத்துச்சென்றது, திருத்தந்தையின் தர்மப்பணித் துறை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில் இயங்கிவரும் பெரும்பாலான நிறுவனங்களும், வத்திக்கானின் பல்வேறு துறைகளும் கோடைவிடுமுறையில் இருந்தபோது, திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பானத் துறை, தன் பணிகளைத் தொடர்ந்தது என்றும், குறிப்பாக, சிறைப்படுத்தப்பட்டோர், மற்றும் ஒதுக்கப்பட்டோர் நடுவே, தனிப்பட்ட பணிகளை நிறைவேற்றியது என்றும், இத்துறையினர், செப்டம்பர் 7, இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

உரோம் நகரில் வாழும் வீடற்றோரை, வெவ்வேறு குழுக்களாக சேர்த்து, அவர்களை, கடற்கரை, ஏரிகள், மற்றும் திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான Castel Gandolfo ஆகிய இடங்களுக்கு சுற்றுலாவாக அழைத்துச்சென்றது, திருத்தந்தையின் தர்மப்பணித் துறை.

உரோம் நகரிலுள்ள Regina Coeli, Rebibbia ஆகிய இரு சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு, கோடை வெப்பத்தைத் தணிக்கும்வண்ணம், 15,000 ஐஸ்கிரீம்கள் வழங்கப்பட்டன என்றும், ஆண்டு முழுவதும், சிறைப்பட்டோருடன் மேற்கொள்ளப்படும் சந்திப்புகள், கோடை விடுமுறையால் நிறுத்தப்படவில்லை என்றும், இவ்வறிக்கை கூறுகிறது.

ஆப்ரிக்காவில், கோவிட் பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மூன்று வறிய நாடுகளுக்குத் தேவையான சுவாசக்கருவிகள், மருத்துவ உதவிகள், மருத்துவ மனைகளின் சீரமைப்பு ஆகியவற்றிற்காக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 20 இலட்சம் யூரோக்கள், நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளன என்று, இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

08 September 2021, 13:46