தேடுதல்

சிங்கப்பூரில் பெருந்தொற்று பரிசோதனை சிங்கப்பூரில் பெருந்தொற்று பரிசோதனை 

உலகளவில் பொதுவான நலவாழ்வு பற்றிய கண்ணோட்டம்

பெருந்தொற்றிலிருந்து நாம் உண்மையாகவே பாடம் கற்றுக்கொண்டிருந்தால், வருங்காலத்தை எவ்வாறு உருவாக்கவேண்டும் என்பதில் அக்கறை காட்டுவோம் - பேராயர் பாலியா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“உலகளாவியப் பார்வையில் பொதுநலம், பெருந்தொற்று, உயிரியல்நன்னெறி, வருங்காலம்” என்ற தலைப்பில், திருப்பீட வாழ்வுக் கழகம், இம்மாதம் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை, கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள பிரச்சனைகளைக் களைந்து, சமத்துவ, மற்றும், நீடித்த நிலையான வருங்காலத்தையும், புதுப்பிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தையும் அமைப்பதற்கு, இக்கருத்தரங்கில் கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள, திருப்பீட வாழ்வுக் கழகத்தின் தலைவர் பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள், நம் உடல்நலத்தைப் பராமரிப்பதற்கு, முதலில் நாம் அனைவரும் உயிரோடு வாழவேண்டும் என்றும், பெருந்தொற்று தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதற்கு, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

எனினும், உலக அளவில், நலவாழ்வுப் பராமரிப்பில் சமத்துவநிலை காக்கப்படவேண்டும் என்பதை நாம் மறக்கக்கூடாது என்றும், பெருந்தொற்றிலிருந்து நாம் உண்மையாகவே பாடம் கற்றுக்கொண்டிருந்தால், வருங்காலத்தை எவ்வாறு உருவாக்கவேண்டும் என்பதில் அக்கறை காட்டுவோம் என்றும், பேராயர் பாலியா அவர்கள் கூறினார்.

2011ம் ஆண்டில் நொபெல் மருத்துவ விருதுபெற்ற டாக்டர் Jules Hoffman, காமரூன் நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் டாக்டர் John Nkengasong, உலக மருத்துவ கழகத்தின் தலைவர் டாக்டர் David Barbe, அமெரிக்க நாடுகளின் நலவாழ்வுக் கழக இயக்குனர் டாக்டர் Carissa Etienne, திருஇதய கத்தோலிக்க பல்கலைக்கழத்தின் டாக்டர் Walter Ricciardi போன்றோர், இக்கருத்தரங்கில் உரையாற்றவுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2021, 15:35