தேடுதல்

Brezje அன்னை மரியாவின் திருத்தலத்தில், மறையுரை வழங்கிய கர்தினால் பரோலின் Brezje அன்னை மரியாவின் திருத்தலத்தில், மறையுரை வழங்கிய கர்தினால் பரோலின்  

சுலோவேனியா - 30வது விடுதலை நாளில் கர்தினால் பரோலின்

சுலோவேனியா அடைந்துள்ள விடுதலையின் ஒரு முக்கிய பண்பாக, அந்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமைகளும், மாண்பும் மதிக்கப்படவேண்டும் – கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுலோவேனியா நாடு விடுதலை அடைந்ததன் 30வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துக்களையும், தன்னுடைய தனிப்பட்ட வாழ்த்துக்களையும் அந்நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பதாக திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

1991ம் ஆண்டு விடுதலையடைந்த சுலோவேனியா நாட்டின் 30வது ஆண்டு நிறைவையும், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் அந்நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதன் 25வது ஆண்டு நிறைவையும் சிறப்பிக்க, அந்நாட்டிற்குச் சென்றுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், அந்நாட்டின் Brezje நகரில் அமைந்துள்ள அன்னை மரியாவின் திருத்தலத்தில், ஆகஸ்ட் 31 இச்செவ்வாயன்று, திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கினார்.

அந்நாடு விடுதலை பெற்ற ஐந்து ஆண்டுகள் சென்று அங்கு முதல் முறையாக சென்ற திருத்தந்தை என்ற மகிழ்வை தான் அடைந்துள்ளதாக கூறிய திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், சுலோவேனியா நாடு அடைந்த விடுதலையின் ஒரு முக்கிய அம்சமாக, மத உரிமை விளங்குவதைக் குறித்து Brezje அன்னை மரியாவின் திருத்தலத்தில் தன் மகிழ்வை வெளியிட்டதை, கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

சுலோவேனியா அடைந்துள்ள விடுதலையின் ஒரு முக்கிய பண்பாக, அந்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமைகளும், மாண்பும் மதிக்கப்படவேண்டும் என்றும், கிறிஸ்தவ நம்பிக்கையின் வழியே அந்நாடு தன் எதிர்காலத்தை வளமுடன் கட்டியெழுப்ப முடியும் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் நினைவுறுத்தினார்.

மனித உரிமைகள் அனைத்தின் இதயமாக மத உரிமை விளங்கிறது என்று, 1999ம் ஆண்டின் துவக்கத்தில் வழங்கிய உலக அமைதி நாள் செய்தியில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் கூறியதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், மத உரிமையைப் பெறுவதற்கு சுலோவேனியா நாடு மேற்கொண்ட போராட்டங்களை மறந்துவிடாமல், இந்த உரிமையை போற்றி வளர்க்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2021, 14:22