தேடுதல்

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் 

42வது உலக சுற்றுலா நாள் 2021 செய்தி

சுற்றுலாப் பயணிகளும், சுற்றுலாத்தலங்களின் மக்களும் சந்திப்பதற்கு அனுமதிப்பவைகளாக, சுற்றுலாக்கள் அமையவேண்டும் - கர்தினால் பீட்டர் டர்க்சன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒருங்கிணைந்த முன்னேற்றத்தில், மனித சமுதாயம் முழுவதையும் உள்ளடக்குகின்ற மற்றும், அதன் நல்வாழ்வை மையப்படுத்துகின்ற, மதிப்புமிக்க, மற்றும், நியாயமான பொருளாதாரம் உருவாக்கப்படுமாறு, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், செப்டம்பர் 11, இச்சனிக்கிழமையன்று, உலகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.

இம்மாதம் 27ம் தேதி கடைப்பிடிக்கப்படும் 42வது உலக சுற்றுலா நாளுக்கென்று, செய்தி ஒன்றை இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

தொழில் துறைகளிலும், பணியாள்களிலும், குறிப்பாக பகுதிநேர பணியாள்களில் பெருந்தொற்று உருவாக்கியுள்ள கடும்தாக்கங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், சுற்றுலாப் பொருளாதாரத்தில், மக்களின் எண்ணிக்கை மற்றும், புள்ளிவிவரங்களைக் கணக்கிட்டுக்கொண்டிருக்காமல், மனிதரின் மாண்புக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு கூறியுள்ளார்.

பெருந்தொற்று முடிவுற்ற பின்னர், நம் முந்தைய போலியான அமைப்புமுறைகளில் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது என்றும், குடியிருப்பு, வேலைவாய்ப்பு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அமைப்புமுறை உருவாக்கப்படவேண்டும் என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

மக்கள் வாழ்வுக்கு முக்கியமாகத் தேவைப்படும், பொருளாதார முன்னேற்றத்தையே, உலக சுற்றுலா நாளில், தனது திருப்பீட அவை ஊக்குவிக்க விரும்புகின்றது என்று கூறியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், சுற்றுலாப் பயணிகளும், சுற்றுலாத்தலங்களின்  மக்களும் சந்திப்பதற்கு அனுமதிப்பவைகளாக, சுற்றுலாக்கள் அமையவேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2021, 15:34