தேடுதல்

Šaštin  துயருறும் அன்னை மரியா Šaštin துயருறும் அன்னை மரியா 

ஹங்கேரி, சுலோவாக்கியா நாடுகளுக்கு 4 நாள் திருத்தூதுப் பயணம்

புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ் ஆகிய இருவரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி வீதிக்குச் சென்று நற்செய்தி அறிவிக்கும் திருஅவைக்கு நாம் சாட்சிகளாக வாழுமாறு, சுலோவாக்கியாவில் திருத்தந்தை அழைப்பு விடுப்பார் – கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து, செப்டம்பர் 12, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் அதிகாலை 5.20 மணிக்கு, தனது 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் துவக்குகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி மற்றும், சுலோவாக்கியா நாடுகளுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும் இந்த நான்கு நாள் திருத்தூதுப் பயணம் பற்றி, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இந்த உலகிற்குத் திறந்த மனதாய் இருக்கின்ற ஒரு திருஅவைக்குச் சான்றுகளாக வாழுமாறு திருத்தந்தை அழைப்புவிடுப்பார் என்று கூறினார்.

புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் 52வது உலக திருநற்கருணை மாநாட்டை நிறைவுசெய்வதற்காக அங்குச் செல்லவிருக்கின்ற திருத்தந்தையை வரவேற்பதற்கு, அம்மாநாட்டில் பங்குகொள்ளும் பல்வேறு நாடுகளின் விசுவாசிகள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

இவ்வாண்டு ஜூலையில், பெருங்குடலில் ஏற்பட்ட பிரச்சனையால் அறுவை சிகிச்சைசெய்து குணம் பெற்றுள்ள திருத்தந்தை, அதற்கு, சுலோவாக்கியா நாட்டின் Šaštin நகரில் வணங்கப்பட்டுவரும் துயருறும் அன்னை மரியாவிடம் நன்றி சொல்வார் எனவும், மிகவும் துன்பச்சூழல்களை எதிர்கொண்டுவரும் மக்களை அந்த அன்னையிடம் அர்ப்பணிப்பார் எனவும் எடுத்துரைத்தார், கர்தினால் பரோலின்.

ஈராக் திருத்தூதுப் பயணத்தை முடித்துத் திரும்பிய விமானப் பயணத்தில் திருத்தந்தை அறிவித்த இந்த 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, இரு திருத்தூதுப் பயணங்களாக நாம் கருதலாம் என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், ஆவல், மற்றும், இறைவேண்டல் ஆகிய இரு அம்சங்களின் அடிப்படையில், இந்த பயணங்களை திருத்தந்தை அறிவித்தார் என்றும் கூறினார். 

சிரில், மெத்தோடியஸ் ஆகிய புனிதர்களின் நினைவிலேயே வாழ்கின்ற சுலோவாக்கியா சமுதாயம் திருத்தந்தையை வரவேற்பது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் பரோலின் அவர்கள், அந்நாட்டு அரசியலமைப்பின் முன்னுரையிலேயே, இப்புனிதர்கள், ஆன்மீக மற்றும் கலாச்சாரத் தந்தையர்களாக குறிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதை உணர்ந்த திருத்தந்தை, இப்புனிதர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, வீதிக்குச் சென்று நற்செய்தி அறிவிக்கும் திருஅவைக்கு, நாம் சாட்சிகளாக வாழுமாறு அழைப்புவிடுப்பார் என்றும் கூறினார். 

11 September 2021, 15:18