தேடுதல்

ஆப்கான் சிறாருக்கு மருத்துவ ஆய்வுகள் நடத்த மருத்துவருடன் சென்ற கர்தினால் Krajewski ஆப்கான் சிறாருக்கு மருத்துவ ஆய்வுகள் நடத்த மருத்துவருடன் சென்ற கர்தினால் Krajewski 

மாற்றுத்திறன் கொண்ட ஆப்கான் சிறார் 25 பேருக்கு உதவிகள்

ஆப்கான் நாட்டிலிருந்து இத்தாலி வந்து சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட சிறுவர், சிறுமியர், இத்தாலியப் பள்ளிகளில் சேருவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவரும் கர்தினால் Konrad Krajewski

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாளராகச் செயல்படும் கர்தினால் Konrad Krajewski அவர்கள், செப்டம்பர் 7, இச்செவ்வாயன்று, உரோம் நகருக்கருகே உள்ள Tor Bella Monaca என்ற இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆப்கான் நாட்டு சிறுவர், சிறுமியரை சந்தித்து, அவர்கள், இத்தாலிய பள்ளிகளில் சேருவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

ஆப்கான் தலைநகர் காபூலில், புனித அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரிகள் நால்வரும், அவர்கள் கண்காணிப்பில் இருந்த சிறுவர், சிறுமியர், 25 பேரும், இருவாரங்களுக்கு முன், உரோம் நகர் வந்து சேர்ந்ததையடுத்து, அவர்கள், Tor Bella Monaca என்ற இடத்தில் அருள் சகோதரிகள் நடத்தும் ஓர் இல்லத்தில், இருவாரங்கள், மருத்துவக் கட்டுப்பாடுகளுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களது தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நான்கு அருள்சகோதரிகளுக்கும், 25 இளையோருக்கும் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள, கர்தினால் Krajewski அவர்கள், ஒரு சில மருத்துவர்களை அவ்வில்லத்திற்கு அழைத்துச்சென்று, ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, அவ்விளையோர், இத்தாலியில் தங்குவதறகும், பள்ளிகளில் சேருவதற்கும் தேவையான ஆவணங்கள் தாயாரிக்கப்பட்டுவருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

6 வயதுக்கும், 22 வயதுக்கும் உட்பட்ட 14 சிறுவர்களும், 11 சிறுமிகளும், மாற்றுத்திறன் கொண்டோர் என்பதால், அவர்களது பெற்றோரால் கைவிடப்பட்டு, காபூல் நகரில், அருள் சகோதரிகள் நடத்திவந்த இல்லத்தில் வளர்ந்துவந்தனர்.

தற்போது, ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சனைகளால், அந்நாட்டை விட்டு வெளியேறி, இத்தாலி நாட்டை அடைந்துள்ள இவர்களை, திருத்தந்தையின் தர்மப்பணித் துறை, தன் கண்காணிப்பின் கீழ் ஏற்றுக்கொண்டுள்ளது.

08 September 2021, 13:53