தேடுதல்

சூடானில் பெண்கள் சூடானில் பெண்கள்  (AFP or licensors)

வேலையில் பெண்கள், ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட...

உலகளாவியப் பாதுகாப்பிற்கு, OSCE அமைப்பு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு திருப்பீடம் எப்போதும் ஆதரவாக இருக்கும் - பேராயர் பால்வோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பொருளாதாரத் துறையில், பெண்கள், ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படவேண்டும் என்று, OSCE எனப்படும், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அமைப்பு நடத்திய கூட்டமொன்றில், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் வலியுறுத்திக் கூறினார்.

உலகளாவிய பாதுகாப்பு, நீடித்த நிலையான வளர்ச்சி, மற்றும், பெண்களை பொருளாதாரத்தில் மேம்படுத்தல் ஆகிய தலைப்புக்களில், OSCE அமைப்பின் பொருளாதார, மற்றும், சுற்றுச்சூழல் துறை, பிராக் நகரில் நடத்திய 29வது கூட்டத்தில், செப்டம்பர் 09, இவ்வியாழனன்று, திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய பேராயர் கார்லோ பால்வோ அவர்கள், இவ்வாறு கூறினார்.   

ஊதியம், ஆயுள்காப்பீடு, மற்றும், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பாகுபாடுகள் இருக்கக்கூடாது எனவும், பாகுபாடுகள் நிலவினால்,  அவை அநீதியான நடவடிக்கைகளுக்கே வழியமைக்கும் எனவும், பேராயர் பால்வோ அவர்கள் கூறினார்.

செக் குடியரசின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் பேராயர் பால்வோ அவர்கள், திருப்பீடத்தின் பிரதிநிதியாக, இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், பொருளாதாரத்தை மேம்படுத்துவதில், பெண்களின் பங்கில், முன்னேற்றம் தெரிந்தாலும், உலகெங்கும், ஆண்களைப் போலவே பெண்களும், சம மாண்பும், சம உரிமைகளும் பெறுவதற்கு, OSCE அமைப்பு, தன் முயற்சிகளை அதிகரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் எதிர்விளைவுகளில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டிய பேராயர் பால்வோ அவர்கள், இறுதியில், உலகளாவியப் பாதுகாப்பிற்கு, OSCE அமைப்பு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு திருப்பீடம் எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும் உறுதி கூறினார்.

10 September 2021, 15:45