தேடுதல்

அன்பின் மகிழ்வில் ஒரு குடும்பம் அன்பின் மகிழ்வில் ஒரு குடும்பம் 

2022ம் ஆண்டின் 10ம் உலக குடும்ப மாநாட்டிற்கென தயாரிப்புக்கள்

திருஅவையின் சமுதாயக் கோட்பாடுகளின் ஒளியில் குடும்பங்களின் வளர்ச்சித் திட்டங்களை அனைத்துக் குடும்பங்களும் பகிரும் வகையில், கத்தோலிக்க பல்கலைக்கழகங்களின் உதவியுடன் புதிய திட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
உலகிலுள்ள கத்தோலிக்க பல்கலைக்கழகங்களின் ஈடுபாட்டுடன் குடும்பங்கள் பற்றிய ‘கத்தோலிக்க உலகளாவிய ஒப்பந்தம்’ ஒன்று உருவாக்கப்பட்டு, 2022ம் ஆண்டின் உலக குடும்ப கருத்தரங்கின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருஅவையின் சமுதாயக் கோட்பாடுகளின் ஒளியில் குடும்பங்களின் வளர்ச்சித் திட்டங்களை அனைத்துக் குடும்பங்களும் பகிர்ந்துகொள்ளும் வகையில் கத்தோலிக்க பல்கலைக்கழகங்களின் உதவியுடன், இத்திட்டத்தை உருவாக்கியுள்ளது திருப்பீடம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டு, தற்போது செயல்பட்டுவரும் Amoris Laetitia குடும்ப ஆண்டினைச் சிறப்பிக்கும் விதமாக இந்த திட்டத்தை துவக்கியுள்ளதாக அறிவித்தது, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை.
குடும்பம் பற்றிய உலகளாவிய நெருங்கிய ஒப்பந்தம் என்பது, சமூக அறிவியல் திருப்பீட கழகம், இத்தாலியின் மிலானிலுள்ள, அனைத்துலக குடும்ப ஆய்வு மையம், போன்றவைகளின் உதவியுடன், குடும்பம், பொதுநிலையினர், மற்றும் வாழ்வு கழகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களில் குடும்பம் பற்றிய ஆய்வு மையங்களின் துணையுடன், குடும்ப உறவுகள், மதிப்பீடுகள், அவைகளின் கலாச்சாரம் மற்றும் மானுடவியல் முக்கியத்துவம் குறித்து நடத்தப்படும் தகவல் சேகரிப்பு, மற்றும் ஆய்வுகளின் தொகுப்பு, அடுத்த ஆண்டில் நடைபெறும் குடும்ப மாநாட்டின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என்கிறது, இத்திருப்பீட அவை.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அன்பின் மகிழ்வு என்ற மடல் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டதன் 5ம் ஆண்டு நிறைவு இவ்வாண்டு மார்ச் மாதம் சிறப்பிக்கப்பட்டபோது, Amoris Laetitia குடும்ப ஆண்டை அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது, வரும் ஆண்டு ஜூன் 26ம் தேதி, குடும்பங்களுக்கான 10வது கூட்டத்துடன், உரோம் நகரில் தன் பங்கேற்புடன் நிறைவுக்கு வரும் என அறிவித்திருந்தார்.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2021, 14:46