தேடுதல்

பெய்ரூட் துறைமுக வெடிப்பின் முதலாம் ஆண்டு நினைவு பெய்ரூட் துறைமுக வெடிப்பின் முதலாம் ஆண்டு நினைவு  

கர்தினால் சாந்த்ரி: லெபனோன் நாட்டிற்காக செபியுங்கள்

புனித ஸ்தேவான், மற்றும், நம் காலத்தின் மறைசாட்சிகள் போன்று, கிறிஸ்துவில் நம் பார்வையைப் பதித்து, அவரில் வேரூன்றப்பட்ட உடன்பிறந்த உணர்வில் ஒன்றுசேர்ந்து செயல்படுவோம், மன்னிப்பு மற்றும், பிறரன்பில் வளர்வோம் - கர்தினால் சாந்த்ரி.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

லெபனோன் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுக வெடிப்பு இடம்பெற்றதன் முதலாம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்த கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள், அந்நாட்டிற்காக இறைவேண்டல் செய்யுமாறு அழைப்புவிடுத்தார்.

திருஅவையின் முதல் மறைசாட்சி புனித ஸ்தேவானின் புனிதப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதன் நினைவாக, ஆகஸ்ட் 03 இச்செவ்வாய் மாலையில், வட இத்தாலியின் Concordia-Pordenone மறைமாவட்டப் பேராலயத்தில், திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் சாந்த்ரி அவர்கள், லெபனோன் நாட்டின் நல்வாழ்வுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், புனித ஸ்தேவானின் மறைசாட்சியம், மற்றும் அவரின் எடுத்துக்காட்டான வாழ்வையும், அல்ஜீரியா நாட்டில் ஏழு டிராப்பிஸ்ட் ஆழ்நிலை தியான துறவிகள் கடத்தப்பட்டது, மற்றும், அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவு இவ்வாண்டில் நினைவுகூரப்படுவதையும் கர்தினால் சாந்த்ரி அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

புனித ஸ்தேவான் மற்றும், நம் காலத்தின் மறைசாட்சிகள் போன்று, கிறிஸ்துவில் நம் பார்வையைப் பதித்து, அவரில் வேரூன்றப்பட்ட உடன்பிறந்த உணர்வில் ஒன்றுசேர்ந்து செயல்படவும், மன்னிப்பு மற்றும், பிறரன்பில் வளரவும் கேட்டுக்கொண்டார், கர்தினால் சாந்த்ரி.

ஏழு டிராப்பிஸ்ட் சபை மறைசாட்சிகள்

அல்ஜீரியா நாட்டின் உள்நாட்டுப் போரின்போது, Tibhirine ஆழ்நிலை தியான துறவு இல்லத்தில் வாழ்ந்த ஏழு டிராப்பிஸ்ட் சபைத் துறவியர், 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதிக்கும், 27ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் ஆயுதம் ஏந்திய குழுக்களால் கடத்தப்பட்டனர். அது நடந்து இரு ஆண்டுகள் சென்று அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2009ம் ஆண்டில் இஸ்லாமியத் தீவிரவாதக் குழு, இந்த கொடூரச்செயலுக்குப் பொறுப்பேற்றது. ஆயினும் இத்துறவிகளை அல்ஜீரிய இராணுவம் கொலைசெய்தது என்று, ஓய்வுபெற்ற இராணுவ அதிபரி François Buchwalter அவர்கள் கூறியுள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

புனித ஸ்தேவான்

முதல் நூற்றாண்டில் கொல்லப்பட்ட புனித ஸ்தேவானின் உடல், எருசலேம் நகருக்கு ஏறத்தாழ இருபது கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஒரு பழைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. கி.பி.415ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு ஏறத்தாழ 9 மணியளவில், இறைஊழியர் அருள்பணி லூசியான் என்பவருக்கு கனவில் தோன்றிய மனிதர் ஒருவர் சுட்டிக்காட்டிய இடத்தில் புனித ஸ்தேவானின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. அது திறக்கப்பட்டபோது அவ்விடத்தில் நின்ற பலரது நோய்கள் அற்புதமாய் குணமாயின என்று சொல்லப்படுகிறது. அப்புனிதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சில ஆலயங்கள், இந்த புனிதப் பொருள்கள் கண்டுபடிக்கப்பட்ட நிகழ்வை, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 3ம் தேதி சிறப்பிக்கின்றன.

04 August 2021, 12:51