தேடுதல்

Vatican News
கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

கர்தினால் பரோலின்: நீதி மற்றும், பிறரன்பின் கனியே, அமைதி

மற்றவரின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களைப் பாராட்டுவதற்கும், மற்றவரின் சரியான கருத்துக்களுக்கு திறந்தமனதாய் இருப்பதற்கும் உரையாடல் உதவுகிறது - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தென் கொரிய அமைச்சகம் ஒன்று, ஆகஸ்ட் 31, இச்செவ்வாயன்று துவக்கியுள்ள மூன்று நாள் மெய்நிகர் கூட்டம் ஒன்றிற்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஊக்குவிப்பதில் திருஅவைகளின் பங்கு குறித்து தன் செய்தியில் பேசியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், நாம் மற்றவரின் உரிமைகளை மீறக்கூடாது என்பதை, நீதி வலியுறுத்தும் அதேவேளை, அவர்களுக்கு உரியதை அவர்களுக்கே அளித்துவிடவேண்டும் என்றும் கூறுகிறது என எடுத்துரைத்தார்.

மற்றவர், நம் உடன்பிறப்புக்கள் என்று உணரவைப்பது, பிறரன்பே எனவும், இந்த உணர்வு, ஒத்துழைப்பையும், நட்புறவையும் வளர்க்கின்றது எனவும் உரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், நீதி, பிறரன்பில் தன் நிறைவைக் காணும்போதுதான், உலகில் உண்மையான அமைதியை உருவாக்கமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார். 

நாடுகளும், மக்களும், ஒருவர் ஒருவரை உடன்பிறப்புக்களாகவும், கடவுளின் பிள்ளைகளாகவும் சந்தித்து, பொதுவான வருங்காலத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்று, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் கூறியிருப்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள், தன் காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்றல், உடன்பயணித்தல், உற்றுக்கேட்டல் ஆகிய மூன்று பண்புகள் பற்றி விளக்கியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், மற்றவரின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களைப் பாராட்டுவதற்கும், மற்றவரின் சரியான கருத்துக்களுக்கு திறந்தமனதாய் இருப்பதற்கும், உற்றுக்கேட்கும் மனநிலையை வளர்ப்பதற்கும் உரையாடல் உதவுகிறது என்றும் கூறியுள்ளார்.

இரு கொரிய நாடுகளின் ஒன்றிப்புக்காக முயற்சிக்கும், தென் கொரிய ஒன்றிணைப்பு அமைச்சகத்தின், கொரிய உலகளாவிய அமைதி (KGFP) என்ற அமைப்பு, ஒவ்வோர் ஆண்டும், கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் 31, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள இக்கூட்டம், செப்டம்பர் 2, வருகிற வியாழனன்று நிறைவடையும்.

"கொரிய நாடுகளுக்கும், சமுதாயங்களுக்கும் இடையேயுள்ள உறவில் ஒரு புதிய பார்வை: அமைதி, பொருளாதாரம், மற்றும் வாழ்வுக்கு அழைப்பு” என்ற தலைப்பில், இப்போதைய கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் உட்பட, ஏறத்தாழ இருபது நாடுகளின் பிரதிநிதிகள், இந்த மெய்நிகர் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். 2021ம் ஆண்டில், இரு கொரிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டதன் 30ம் ஆண்டு நினைவுகூரப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் பயனாக, வட கொரியா, ஐ.நா.வில் உறுப்பு நாடாக இணைந்தது. இரு கொரிய நாடுகள், இவ்வாண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று, தங்களின் 76வது விடுதலை நாளைச் சிறப்பித்தன.

31 August 2021, 14:59