தேடுதல்

Vatican News
1891ம் ஆண்டு, மே 15ம் தேதி, திருத்தந்தை 13ம் லியோ அவர்களின் Rerum Novarum திருமடல் வெளியானபோது... 1891ம் ஆண்டு, மே 15ம் தேதி, திருத்தந்தை 13ம் லியோ அவர்களின் Rerum Novarum திருமடல் வெளியானபோது... 

L’Osservatore Romano - 160 ஆண்டுகள் நிறைவு

L’Osservatore Romano வத்திக்கான் நாளிதழை ஒவ்வொரு நாளும் வாசித்து வருவதாகவும், இவ்விதழ் வெளிவராத நாள்களில், ஒரு சிறு வெற்றிடத்தை உணர்வதாகவும் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

1861ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி, தன் முதல் இதழை வெளியிட்ட வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romano, 2021, ஜூலை 1, இவ்வியாழனன்று, 160 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த முக்கிய தருணத்தையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்டுள்ள ஒரு குறும் காணொளிச்செய்தியில், வத்திக்கான் நாளிதழை தான் ஒவ்வொரு நாளும் வாசித்து வருவதாகவும், இவ்விதழ் வெளிவராத நாள்களில், ஒரு சிறு வெற்றிடத்தை உணர்வதாகவும் கூறியுள்ளார்.

அர்ஜென்டீனா நாட்டில் தான் இருந்த வேளையில், இவ்விதழின் இஸ்பானிய வாரப்பதிப்பை தவறாமல் வாசித்து வந்ததாகவும், அது, தன்னை, தாய் திருஅவையுடனும், திருப்பீடத்துடனும் உறவுகொண்டிருக்க உதவியது என்றும், திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

ஜூலை 1, இவ்வியாழனன்று, L’Osservatore Romano, தன் 160வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கிறது என்பதை, ஜூன் 29, தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஊடக நிறுவனத்தில் பணியாற்றுவோர் அனைவருக்கும் தன் நன்றியைக் கூறியதோடு, அவர்கள், உறுதியுடன் தொடர்ந்து பணியாற்ற, தன் வாழ்த்துக்களையும் செபங்களையும் வழங்குவதாகக் கூறினார்.

1861ம் ஆண்டு முதல், வாரத்தின் திங்கள் கிழமை தவிர, ஏனைய ஆறு நாள்கள் தன் பதிப்புக்களை வெளியிட்டுவரும் L’Osservatore Romano இதழ், இத்தாலியம், பிரெஞ்சு, இஸ்பானியம், ஆங்கிலம், போர்த்துகீசியம், ஜெர்மன், ஆகிய மொழிகளில், வார இதழ்களையும் வெளியிட்டு வருகின்றது.

1968ம் ஆண்டு முதல் வெளியாகிவரும் ஆங்கில வார இதழ், வத்திக்கானிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் அச்சிடப்பட்டு வருகிறது. அத்துடன், 2009ம் ஆண்டு முதல், அது, இந்தியாவில், மலையாள மொழியிலும் வெளியிடப்பட்டு வருகிறது.

1980ம் ஆண்டு, அப்போதையத் திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களின் விருப்பத்திற்கேற்ப, போலந்து மொழியில், இவ்விதழ், ஒரு மாதஇதழாக வெளியிடப்பட்டு, அந்நாட்டு ஆயர் பேரவை வழியாக, மக்களை அடைந்துவருகிறது.

திருத்தந்தையரின் மறைக்கல்வி உரை, மூவேளை செப உரை மற்றும் அவர் பல்வேறு குழுக்களுக்கு வழங்கும் உரைகள் மற்றும் செய்திகள் ஆகியவை தவறாமல் இடம்பெறும் இவ்விதழில், திருத்தந்தையர் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணங்களின்போது, சிறப்பான முறையில் அப்பயண விவரங்களும், உரைகளும் வெளியாகி வருகின்றன.

திருத்தந்தையர் வெளியிடும் திருமடல்களை தவறாமல் வழங்கிவரும் L’Osservatore Romano இதழ், இறுதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி சனிக்கிழமை, அசிசி நகரில் கையொப்பமிட்ட 'Fratelli Tutti' திருமடல், L'Osservatore Romano இதழாக அச்சிடப்பட்டு, அக்டோபர் 4 ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்தோருக்கு, இலவசமாக வழங்கப்பட்டது.

01 July 2021, 14:42