தேடுதல்

குடும்பங்களின் பத்தாவது உலக மாநாட்டின் உருவப்படமும், உருவாக்கிய ஓவியர் மார்கோ இவான் ரூப்னிக் அவர்களும் குடும்பங்களின் பத்தாவது உலக மாநாட்டின் உருவப்படமும், உருவாக்கிய ஓவியர் மார்கோ இவான் ரூப்னிக் அவர்களும்  

குடும்பங்களின் பத்தாவது உலக மாநாடு – உருவப்படம் வெளியீடு

1994ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் விருப்பத்திற்கு இணங்க, குடும்பங்களின் முதல் உலக மாநாடு உரோம் நகரில் நடைபெற்றது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2022ம் ஆண்டு, ஜூன் 22ம் தேதி முதல் 26ம் தேதி முடிய, உரோம் நகரில் நடைபெறவிருக்கும் குடும்பங்களின் பத்தாவது உலக மாநாட்டிற்கென உருவாக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான உருவப்படம், ஜூலை 28, இப்புதனன்று, வத்திக்கானில் வெளியிடப்பட்டது.

பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையும், உரோம் மறைமாவட்டமும் இணைந்து வெளியிட்ட இந்த உருவப்படத்தை, சுலோவேனியா நாட்டவரும், இயேசு சபைத் துறவியுமான ஓவியர் மார்கோ இவான் ரூப்னிக் அவர்கள் உருவாக்கியுள்ளார்.

இயேசு ஆற்றிய முதல் அருங்குறியென யோவான் நற்செய்தியில் பதிவாகியுள்ள கானா திருமண நிகழ்வை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓவியத்திற்கு, "இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது" என்று திருத்தூதரான பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறும் சொற்கள் மையப்பொருளாக வழங்கப்பட்டுள்ளது.

திருமண வாழ்வில் ஈடுபட்டுள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் அறிவுரை வழங்கும் புனித பவுல் அடியார், இந்த அறிவுரைகளின் இறுதியில், திருமண உறவையும், கிறிஸ்துவுக்கும் திருஅவைக்கும் உள்ள உறவையும் இணைத்து, "இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்" (எபேசியர் 5:32) என்று கூறுவதை, கருத்தில் கொண்டு இந்த ஓவியத்தை வடிவமைத்தாக அருள்பணி ரூப்னிக் அவர்கள் கூறினார்.

தண்ணீர் திராட்சை இரசமாக மாறும் புதுமை நடைபெறும் இக்காட்சியில், அன்னை மரியா, இயேசு ஆகியோர் முன்புறத்திலும், அவர்களுக்கு முன் உள்ள பாத்திரங்களில் தண்ணீர் நிறைக்கும் பணியாள் ஒருவரும் வரையப்பட்டிருக்க, அவர்களுக்கு பின்னே உள்ள ஒரு மெல்லிய திரைக்குப் பின், கானா திருமணத்தில் இணைக்கப்பட்ட இளம் தம்பதியர் இருப்பது போல் இந்த ஓவியம் அமைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவுக்கும் திருஅவைக்கும் உள்ள உறவை, திருமண உறவுடன் இணைத்து, புனித பவுல் சிந்தித்திருப்பதால், தண்ணீரை நிறைக்கும் பணியாளரின் உருவத்தை, பவுலின் உருவத்தில் தான் உருவாக்கியதாக அருள்பணி ரூப்னிக் அவர்கள் விளக்கமளித்தார்.

1994ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் விருப்பத்திற்கு இணங்க, குடும்பங்களின் முதல் உலக மாநாடு உரோம் நகரில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சிறப்பு யூபிலி ஆண்டான, 2000மாம் ஆண்டு, குடும்பங்களின் உலக மாநாடு மீண்டும் ஒருமுறை, உரோம் நகரில் நடைபெற்றது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடும்பங்களின் உலக மாநாடு, 2018ம் ஆண்டு, அயர்லாந்தின் டப்ளின் நகரில் ஒன்பதாவது உலக மாநாடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

2021ம் ஆண்டு, உரோம் நகரில் மூன்றாவது முறையாக நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த குடும்பங்களின் பத்தாவது உலக மாநாடு, கோவிட் பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியின் காரணமாக, 2022ம் ஆண்டு, ஜூன் 22ம் தேதி முதல் 26ம் தேதி முடிய, உரோம் நகரில் நடைபெறவுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2021, 14:15