கத்தோலிக்கோஸ் 2ம் பவுலோஸ் மறைவுக்கு திருப்பீடம் இரங்கல்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
கேரளாவில், சீரோ மலங்கரா ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபையின் திருத்தந்தை 2ம் Catholicos Baselios Marthoma Paulose அவர்கள் இறைபதம் சேர்ந்ததை முன்னிட்டு, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் அவர்கள், அக்கிறிஸ்தவ சபைக்கு, தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கத்தோலிக்கோஸ் 2ம் பவுலோஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலை, குறிப்பாக, கத்தோலிக்கத் திருஅவையுடன் அதனை ஊக்குவிப்பதில், தன்னை மிகவும் அர்ப்பணித்திருந்தார் என்று, தன் மடலில் கூறியுள்ள கர்தினால் கோக் அவர்கள், அவர், 2013ம் ஆண்டு செப்டம்பரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து வாழ்த்தியதை, சிறப்பாக நினைவுகூர்ந்து, அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதோடு, கத்தோலிக்கத் திருஅவைக்கும், கீழை ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையே, 2014ம் ஆண்டு பிப்ரவரியில் இடம்பெற்ற, இறையியல் உரையாடல் பன்னாட்டுக் குழுவின் 11வது கூட்டத்தின்போது, கத்தோலிக்கோஸ் 2ம் பவுலோஸ் அவர்கள், மிகத் தாராளமாக வழங்கிய உபசரிப்புக்கும், கர்தினால் கோக் அவர்கள் நன்றி கூறியுள்ளார்.
கத்தோலிக்கோஸ் 2ம் பவுலோஸ் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, கேரளாவின் புனித கிரகரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அந்த சிகிச்சை பலனளிக்காமல், ஜூலை 12, இத்திங்களன்று இறைவனடி சேர்ந்தார்.
இவரது அடக்கச்சடங்கில், கேரளாவின் சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் கத்தோலிக்க கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறையின் கத்தோலிக்க கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் ஆகியோர் உட்பட, பல கத்தோலிக்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
74 வயது நிரம்பிய கத்தோலிக்கோஸ் 2ம் பவுலோஸ் அவர்களின் இறுதி அடக்கச்சடங்கை, சீரோ மலங்கரா ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபையின் பேராயர் குரியாகோஸ் மார் கிளீமிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றினார். அந்நிகழ்வில் அச்சபையின் ஆயர்கள், மற்றும், ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.