தேடுதல்

Vatican News
வத்திக்கான் புனித பேதுரு வளாகம் வத்திக்கான் புனித பேதுரு வளாகம்  (Vatican Media)

2020ம் ஆண்டின் நிதி நிலவரம் எதிர்பார்த்த அளவுக்கு மோசமாக இல்லை

வருங்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாது, ஆயினும், திருப்பீடத்தின் நிதி நிலைமையை சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் - அருள்பணி Guerrero

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத்தின் 2020ம் ஆண்டு நிதி இருப்புநிலை அறிக்கை பற்றி, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்களுக்குப் பேட்டியளித்த திருப்பீடத்தின் பொருளாதாரச் செயலகத்தின் தலைவர் அருள்பணி Juan Antonio Guerrero Alves அவர்கள், 2020ம் ஆண்டு, கஷ்டமான ஆண்டாக இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு மோசமாக இல்லை என்று கூறினார்.

இவ்வாண்டில் 6 கோடியே 63 இலட்சம் யூரோக்கள் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவும், ஆயினும், பேதுரு காசு என்ற நிதி அமைப்பிலிருந்து, இதற்கு முந்தைய ஆண்டுகளைவிட, இவ்வாண்டில் குறைவான நிதியே, திருப்பீடத்திற்கெனப் பயன்படுத்தப்பட்டது, அதேநேரம், பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலுள்ள தலத்திருஅவைகளுக்கு அதிக உதவிகள் வழங்கப்பட்டன எனவும், அருள்பணி Guerrero அவர்கள் கூறியுள்ளார்.

இதனால் திருப்பீடத் துறைகளின் செலவினங்களைக் குறைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது எனவும், 2020ம் ஆண்டில், பெருந்தொற்றுக்கு முன்பு, திருப்பீடத்தின் நிதிப் பற்றாக்குறை 5 கோடியே 30 இலட்சம் யூரோக்களாக இருந்தது, பெருந்தொற்றுக்குப்பின், இந்த பற்றாக்குறை 9 கோடியே 70 இலட்சம் யூரோக்களாக எதிர்பார்க்கப்பட்டது என்றும் அருள்பணி Guerrero அவர்கள் எடுத்துரைத்தார்.

கடும் முயற்சிகளை மேற்கொண்டதன் பயனாக, இவ்வாண்டில் 6 கோடியே 63 இலட்சம் யூரோக்கள் நிதிப்பற்றாக்குறையை எட்டியுள்ளோம் என்றுரைத்துள்ள அருள்பணி Guerrero அவர்கள், செலவினங்களைக் குறைப்பதற்கு திருப்பீடத் துறைகள் பொறுப்புடன் செயல்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்.

வருங்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாது, அது கடவுளுக்குரியது, ஆயினும், வருங்காலத்தை நம்பிக்கையோடு மட்டுமே நோக்கமுடியும், பெருந்தொற்று நெருக்கடி எத்தகைய மாற்றங்களைக் கொணரும் எனக் கூறமுடியவில்லை என்று கூறிய அருள்பணி Guerrero அவர்கள், திருப்பீடத்தின் நிதி நிலைமையை சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

24 July 2021, 15:28