தேடுதல்

தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், வயதுமுதிர்ந்தோர் முதல் உலக நாள் தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், வயதுமுதிர்ந்தோர் முதல் உலக நாள்  

தாத்தாக்கள், பாட்டிகள் முதல் உலக நாள் நிகழ்வுகள்

அனைவரும், குறிப்பாக, இளையோர், தாத்தாக்கள், பாட்டிகள் முதல் உலக நாளைச் சிறப்பித்து, தங்களின் தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், தங்கள் பகுதிகளில் தனித்து வாழ்கின்ற வயதுமுதிர்ந்தோரைச் சந்திக்க அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜூலை 25, வருகிற ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில் முதன் முறையாகச் சிறப்பிக்கப்படவிருக்கும், தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், வயதுமுதிர்ந்தோர் முதல் உலக நாள் நிகழ்வுகள் பற்றி, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை, தன் இணைய பக்கத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த முதல் உலக நாளுக்கென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இறைவேண்டலோடு, உலகில் வயது முதிர்ந்த ஆயராக உள்ள, 101 வயது நிரம்பிய, கனடா நாட்டு ஆயர் Laurent Noël அவர்களது இறைவேண்டலும் இணைக்கப்பட்டுள்ளது என்று, அத்திருப்பீட அவை கூறியுள்ளது.

ஜூலை 25, வருகிற ஞாயிறு, உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் தூய பேதுரு பெருங்கோவிலில், புதியவழி நற்செய்தி அறிவிப்புப் பணி பேராயத்தின் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள் நிறைவேற்றும் விழாத் திருப்பலியில், உரோம் மறைமாவட்டத்தில், வயதுமுதிர்ந்தோருக்குப் பணியாற்றும் அமைப்புகள், மற்றும், தன்னார்வலர்கள் என, ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பான்மையினோர், தங்களின் தாத்தாக்கள், பாட்டிகளோடு வருகின்ற பேரப்பிள்ளைகள் எனவும், ஓராண்டுக்கு மேலாக வீட்டைவிட்டே வெளியே செல்லாமல் தனிமையாய் இருந்த நூற்றுக்கணக்கான வயதுவந்தோர், முதன்முறையாக, வெளியே வந்து இத்திருப்பலியில் பங்குபெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருப்பலியின் இறுதியில், வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் இளையோர் கூடியிருந்து, “உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்ற தலைப்பில் திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியோடு, மலர்களையும் தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோருக்கு வழங்குவர்.

இந்த முதல் உலக நாள், உலகின் அனைத்து மறைமாவட்டங்கள், மற்றும், பங்குத்தளங்களில் சிறப்பிக்கப்படும் எனவும், அனைத்து மக்களும், குறிப்பாக, இளையோர் இந்த உலக நாளைச் சிறப்பித்து, இந்நாளிலும், இதையடுத்து வரும் நாள்களிலும், தங்களின் தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், தங்கள் பகுதிகளில் தனித்துவாழ்கின்ற வயதுமுதிர்ந்தோரைச் சந்திக்குமாறும், அத்திருப்பீட அவை கேட்டுக்கொண்டுள்ளது.

இத்தகைய சந்திப்புக்களால், திருஅவை வழங்கும் நிறைபேறுபலன்களைப் பெறலாம் எனவும், பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை கூறியுள்ளது.

இந்நாளுக்கென்று திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி, இறைவேண்டல், மேய்ப்புப்பணி வழிகாட்டல்கள் போன்ற எல்லா விவரங்களும், அத்திருப்பீட அவையின் இணையபக்கத்தில் https://bit.ly/elderly2021 பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2021, 14:33