தேடுதல்

“APSA” அமைப்பு “APSA” அமைப்பு 

திருப்பீடத்தின் நிதி நிலைமையில் பெருந்தொற்று காலத்தில் சவால்கள்

“APSA” அமைப்பு, 2020ம் ஆண்டில், சொத்து வரியாக 59 இலட்சத்து 50 ஆயிரம் யூரோக்களையும், வருமான வரியாக (IRES), 28 இலட்சத்து 80 ஆயிரம் யூரோக்களையும், இத்தாலிய நகராட்சிக்குச் செலுத்தியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

APSA எனப்படும் திருப்பீடத்தின் சொத்து மேலாண்மை அமைப்பின், 2020ம் ஆண்டு நிதி இருப்புநிலை குறித்த அறிக்கையை, அந்த அமைப்பின் தலைவர் பேராயர் Nunzio Galantino அவர்கள், ஜூலை 24, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார்.

திருப்பீட தலைமையகம் வழங்கிய நிதி, மற்றும், முதலீடுகளிலிருந்து கிடைத்த இலாபம் ஆகியவை குறைந்துள்ளன என்று கூறியுள்ள பேராயர் Galantino அவர்கள், இந்நிலையிலும், நிதிப்பற்றாக்குறையால் துன்புற்ற இடங்களுக்கு, APSA அமைப்பால் உதவமுடிந்தது என்று கூறினார்.

பெருந்தொற்று காலத்தில் வரவு குறைவாக இருந்தாலும், இக்காலம் உருவாக்கிய நெருக்கடிகள், “ஒரு திருஅவை” போலச் செயல்படுவதற்கு ஆவலைத் தூண்டியது என்றும், 2020ம் ஆண்டில், இலாபங்கள், 5 கோடியே 10 இலட்சம் யூரோக்களுக்குக் குறைவாகவே இருந்தன என்றும், பேராயர் Galantino அவர்கள் எடுத்துரைத்தார்.

திருப்பீடத்தின் தலைமையகத்தின் தேவைகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள், 4 கோடியே 10 இலட்சம் யூரோக்களிலிருந்து 2 கோடி யூரோக்களாகக் குறைக்கப்பட்டது என்றும், பெருந்தொற்று பாதிப்பு உருவாக்கியுள்ள நெருக்கடியால், இந்த நடவடிக்கை நேர்மறையாக நோக்கப்பட்டது என்றும், பேராயர் Galantino அவர்கள் தெரிவித்தார்.

1967ம் ஆண்டில் “APSA” எனப்படும் திருப்பீடத்தின் சொத்து மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டபின், அதன் நிதி இருப்புநிலை ஜூலை 24, இச்சனிக்கிழமையன்று, முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிதி அறிக்கை குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, பேராயர் Galantino அவர்கள், இது 2020ம் நிதி ஆண்டின் அறிக்கையாகும் எனவும், இவ்வாறு வெளியிடுவதன் வழியாக, திருஅவையின் பணிகள் மீது நம்பிக்கை அதிகரிக்கும் எனவும், திருப்பீடத்தின் வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்துவதாக இது உள்ளது எனவும் தெரிவித்தார்

“APSA” அமைப்பு, 2020ம் ஆண்டில், சொத்து வரியாக 59 இலட்சத்து 50 ஆயிரம் யூரோக்களையும், வருமான வரியாக (IRES), 28 இலட்சத்து 80 ஆயிரம் யூரோக்களையும், இத்தாலிய நகராட்சிக்குச் செலுத்தியுள்ளது. மேலும், இந்த அமைப்பு, 1,778 பில்லியன் யூரோக்கள் முதலீடுகளை நிர்வகித்து வருகிறது.

மூன்றாண்டு திட்டம் ஒன்றையும் மேற்கொண்டுவரும் “APSA” அமைப்பு, இன்னலான சூழலிலும், முன்மதியுடன் செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ள பேராயர் Galantino அவர்கள், பெருந்தொற்று காலத்தில் சவால்களையும் சந்தித்து வருகின்றது என்று விளக்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2021, 15:25